/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சென்னை துறைமுகத்தில் ரூ.60 கோடியில் புதிய கிடங்கு
/
சென்னை துறைமுகத்தில் ரூ.60 கோடியில் புதிய கிடங்கு
ADDED : ஆக 24, 2024 12:12 AM
சென்னை, நாட்டில் உள்ள பெரிய 12 துறைமுகங்களில், மூன்றாவது பெரிய துறைமுகமாக சென்னைத் துறைமுகம் திகழ்கிறது. இந்த துறைமுகத்தில் 24 கப்பல்கள் நிறுத்தும் அளவிற்கு வளர்ச்சி அடைந்துள்ளது.
கார்கள், கன்டெய்னர்கள், உரம், எண்ணெய் உள்ளிட்டவை அதிகளவில் கையாளப்படுகின்றன.
அதேபோல், வெளிநாடுகளில் இருந்து இயந்திரங்கள், மருந்துப் பொருட்கள், மின்னணு மற்றும் மின்சார சாதனங்கள் உள்ளிட்ட ஏராளமான பொருட்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன. அடுத்தகட்ட வளர்ச்சிக்காக, பல்வேறு மேம்பாட்டு பணிகளும் நடந்து வருகின்றன.
இதுகுறித்து, சென்னை துறைமுக தலைவர் சுனில் பாலிவால் கூறியதாவது:
சென்னை துறைமுகத்தை நவீனமாக்கி, ஏற்றுமதி மற்றும் இறக்குமதியை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
குறிப்பாக, தொழில் நிறுவனங்கள் ஊக்குவிப்பது, துறைமுகத்தின் கட்டமைப்பு மேம்பாட்டு பணி, ஏற்றுமதி மற்றும் இறக்குமதி ஊக்குவிப்பு, கடல்சார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, ரயில் மற்றும் சாலை போக்குவரத்து இணைப்பது உள்ளிட்ட பணிகளை படிப்படியாக மேற்கொண்டு வருகிறோம்.
அதன்படி, இங்கு காலியாக உள்ள 18,000 சதுர மீட்டர் பகுதியை கண்டறிந்து, நான்கு இடங்களாக பிரித்து, தலா 4,500 சதுர மீட்டர் பரப்பளவில், 60 கோடி ரூபாய் செலவில் கிடங்குகளை அமைக்க உள்ளோம். இதற்கான, 'டெண்டர்' வெளியிட்டு நிறுவனம் இறுதி செய்யும் பணி நடந்து வருகிறது.
இரு மாதங்களில் பணியை துவங்கி, ஓராண்டுக்குள் முடித்து பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும். அதுபோல், ஏற்கனவே உள்ள 68,000 சதுர மீட்டர் பரப்பு கிடங்கு, பல வசதிகளுடன் மேம்படுத்தப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.