/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சாைலயை ஆக்கிரமித்த கடைகளுக்கு 'நோட்டீஸ்'
/
சாைலயை ஆக்கிரமித்த கடைகளுக்கு 'நோட்டீஸ்'
ADDED : ஆக 03, 2024 12:36 AM

அண்ணா நகர்,
அண்ணா நகர் மண்டலத்தில், வில்லிவாக்கம் - கீழ்ப்பாக்கம் வரை, நியூ ஆவடி சாலை உள்ளது. பாடியை நோக்கி செல்லும் பாதையின் சாலையோரம் ஐ.சி.எப்., ரயில்வேவுக்கும், வில்லிவாக்கம் - கீழ்ப்பாக்கம் நோக்கிச் செல்லும் சாலையோரம், குடிநீர் வாரியத்திற்கும் சொந்தமான இடங்கள் உள்ளன.
இந்த இருபுறங்களில் உள்ள சாலையோரங்களை, பல ஆண்டுகளாக ஏராளமான வாகனம் பழுது பார்க்கும் கடைகள் உள்ளிட்டவை ஆக்கிரமித்து இருந்தன.
குறிப்பாக வில்லிவாக்கம், கிழக்கு அண்ணா நகர், அயனாவரம் பகுதியில் உள்ள குடிநீர் வாரியத்திற்குச் சொந்தமான இடத்தில், சாலையோரங்களில் கடைகள் மற்றும் வீடுகள் கட்டப்பட்டுள்ளன.
இதுகுறித்து நம் நாளிதழில் சுட்டிக்காட்டப்பட்டது.
இதையடுத்து நேற்று காலை, சென்னை மாநகராட்சியின் அண்ணா நகர் மண்டல அதிகாரி, 95 மற்றும் 102வது வார்டுக்கு உட்பட்ட நியூ ஆவடி சாலையோரத்தில், ஆக்கிரமிப்பாளர்களை எச்சரித்து, நோட்டீஸ் வழங்கினர்.
அந்த நோட்டீசில்,'ஆக்கிரமிப்பாளர்கள் இந்த அறிவிப்பு கண்ட மூன்று நாட்களில், தாங்களாகவே முன்வந்து அகற்றிக்கொள்ள வேண்டும்; இல்லாவிட்டால், போலீஸ் உதவியுடன் அகற்றப்படும்' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து, சமூக ஆர்வலர்கள் கூறுகையில்,'கண்துடைப்பிற்காக ஆக்கிரமிப்புகளை அகற்றாமல், நிரந்தரமாக அகற்ற நடவடிக்கை எடுத்து, நியூ ஆவடி சாலையை விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.