பேச்சு சுதந்திரத்தை சபையின் கண்ணியத்தை குறைக்கும் சுதந்திரமாக கருதக்கூடாது; சபாநாயகர் ஓம் பிர்லா
பேச்சு சுதந்திரத்தை சபையின் கண்ணியத்தை குறைக்கும் சுதந்திரமாக கருதக்கூடாது; சபாநாயகர் ஓம் பிர்லா
UPDATED : ஆக 26, 2025 11:21 AM
ADDED : ஆக 26, 2025 08:58 AM

புதுடில்லி; பேச்சு சுதந்திரத்தை சபையின் கண்ணியத்தை குறைக்கும் வகையில் அளிக்கப்பட்ட சுதந்திரமாக கருதக்கூடாது என்று லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா அறிவுறுத்தி உள்ளார்.
டில்லியில் நடைபெற்ற அகில இந்திய சபாநாயர்கள் மாநாட்டின் நிறைவுரையில் அவர் பேசியதாவது;
சட்டமன்ற நடவடிக்கைகளுக்கு தலைமை தாங்கும் போது, அதிகாரம் இல்லாதவர்களாகவும், சுதந்திரமானவர்களாகவும் செயல்படுவதோடு, நீதி பரிபாலனையை நிறைவேற்றுபவர்களாகவும் இருக்க வேண்டும். நமது அரசமைப்பை உருவாக்கியவர்கள், அவையில் அரசுக்கு எதிராக பேசும் உத்தரவாதத்தை அளித்துள்ளனர்.
ஆனால் அதன் நோக்கம் தற்போது குறைந்து வருகிறது. இது நம் அனைவரையும் கவலைக்குள்ளாக்கும் விஷயமாகும். அவைகளில் அர்த்தமுள்ள விவாதம், பொது நலன்கள் சார்ந்த பிரச்னைகளை கருத்தில் கொண்டு பேசுவதை உறுதி செய்து கொள்வது மிகவும் அவசியம்.
மக்கள் பிரதிநிதிகள் தங்கள் கட்சி நலன்களுக்கு அப்பாற்ப்பட்டு, மக்கள் எதிர்பார்ப்புகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும். மக்களின் பிரச்னைகளை அவர்களின் குரலாக எழுப்ப வேண்டும். அவையிலும், அதற்கு வெளியேயும் கண்ணியமான மொழியை பயன்படுத்த வேண்டும்.
ஜனநாயகத்தின் பலமே கருத்து வேறுபாடுகள்தான். ஆனால் உறுப்பினர்கள் அவைக்கு வெளியேயும் நடத்தை விதிகளை பின்பற்ற வேண்டும். நமது வார்த்தைகளையும், செயல்களையும் மக்கள் கவனித்துக் கொண்டு இருக்கிறார்கள். இந்த சுதந்திரத்தை அரசியல்கட்சி உறுப்பினர்கள் உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு ஓம் பிர்லா பேசினார்.