/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
அடுக்குமாடி குடியிருப்பு பராமரிப்பு குழப்பத்தில் ந.வா.வாரியம்
/
அடுக்குமாடி குடியிருப்பு பராமரிப்பு குழப்பத்தில் ந.வா.வாரியம்
அடுக்குமாடி குடியிருப்பு பராமரிப்பு குழப்பத்தில் ந.வா.வாரியம்
அடுக்குமாடி குடியிருப்பு பராமரிப்பு குழப்பத்தில் ந.வா.வாரியம்
ADDED : ஜூலை 02, 2024 12:25 AM
சென்னை, அதிக தளங்களை கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகளை முறையாக பராமரிக்க முடியாததால் விபத்துகள் அதிகரிப்பது நகர்ப்புற வாழ்விட வாரிய அதிகாரிகளுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் நகர்ப்புற ஏழை மக்களுக்கு குடியிருப்பு திட்டங்களை நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் செயல்படுத்துகிறது. மத்திய, மாநில அரசுகளின் நிதியை பயன்படுத்தி இத்திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
கடந்த சில ஆண்டுகள் முன்பு வரை, நகர்ப்புற வாழ்விட வாரிய குடியிருப்புகள் அதிகபட்சம், நான்கு மாடிகள் வரையே கட்டப்பட்டன. ஆனால், மக்களின் தேவையை கருத்தில் வைத்து, 13 - 15 மாடிகள் வரையிலான அடுக்குமாடி குடியிருப்புகளை வாரியம் கட்டுகிறது.
இதற்கு முன் அடுக்குமாடி குடியிருப்புகளை வாரியமே நேரடியாக பராமரித்து வந்தது. ஆனால், தற்போது வீடு ஒதுக்கீட்டாளர்களை உறுப்பினர்களாக சேர்த்து சங்கங்களை ஏற்படுத்தி, அதன் வாயிலாக பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இது போன்ற சங்கங்களை ஏற்படுத்துவது, பதிவு செய்வது என பல்வேறு நிலைகளில் வாரிய அதிகாரிகள் உதவுகின்றனர். ஆனால், இந்த சங்கங்களின் தொடர் செயல்பாடுகளை வரையறுப்பதில் குழப்பம் நிலவுகிறது.
குறிப்பாக, அதிக தளங்களை கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகளில் லிப்ட், ஜெனரேட்டர் போன்ற சிறப்பு வசதிகள் ஏற்படுத்தப்படுகின்றன.
சென்னை புளியந்தோப்பு பகுதியில் நகர்ப்புற வாழ்விட வாரிய குடியிருப்பில் லிப்டில் சிக்கியவரை மீட்கும் பணியில் ஒருவர் இறந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. லிப்ட், ஜெனரேட்டர் போன்ற வசதிகளை ஒதுக்கீட்டாளர்களின் சங்கம் வாயிலாக பராமரிப்பது இயலாத விஷயம் என்கின்றனர் அதிகாரிகள்.
இது குறித்து நகரமைப்பு வல்லுனர்கள் கூறியதாவது:
சென்னை புளியந்தோப்பு நகர்ப்புற வாழ்விட வாரிய குடியிருப்பில் லிப்டில் சிக்கியவரை மீட்கும் முயற்சியில் ஒருவர் இறந்ததுள்ளார். உயர் வருவாய் பிரிவினர் வசிக்கும் தனியார் அடுக்குமாடி குடியிருப்புகளிலேயே லிப்ட் உள்ளிட்ட வசதிகளை பராமரிப்பதில் பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகின்றன.
ஏழை மக்கள் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்புகளில், லிப்ட் உள்ளிட்ட விஷயங்களை பராமரிப்பது மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தி உள்ளது. லிப்ட் உள்ளிட்ட வசதிகளை அமைக்கும் போது, முறையாக உரிமம் பெறப்பட்டு இருந்தாலும், அதில் பேட்டரி பேக்கப் இருப்பது, மின்தடை நேரத்தில் உள்ளே சிக்கியவர்களை வெளியேற்றுவது போன்ற விஷயங்களில், குடியிருப்புவாசிகளுக்கு போதிய விழிப்புணர்வு இல்லை.
அடிப்படை வசதிகளை ஏற்று பராமரிக்கும் சங்கங்கள், இதை மேலாண்மை செய்வது இயலாத பணியாக உள்ளது. வாரியம் சார்பில் இதற்கு தனி பணியாளர்களை அமர்த்த வேண்டும். உயரமான அடுக்குமாடி குடியிருப்புகளை பராமரிப்பதற்கான செயல்திட்டத்தை வாரியம் உருவாக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.