/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
12,495 மனைகளை 10 நாட்களில் ஆய்வு செய்ய உத்தரவு
/
12,495 மனைகளை 10 நாட்களில் ஆய்வு செய்ய உத்தரவு
ADDED : மார் 04, 2025 12:15 AM
சென்னை, கிரையப்பத்திரம் பெறாமல் உள்ள, 12,495 மனைகளை, 10 நாட்களுக்குள் ஆய்வு செய்ய, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் உத்தரவிட்டுள்ளது.
வாரிய நிர்வாக இயக்குநர் அன்சுல் மிஸ்ரா வெளியிட்டுள்ள அறிக்கை:
கிரையப்பத்திரம் பெறாமல் விடுபட்ட மனைகள் குறித்து ஆய்வு நடந்தது. இதில் கிடைத்த தகவல்கள் அடிப்படையில், சம்பந்தப்பட்ட மனைகளை நேரில் ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டு உள்ளது.
சென்னை பெருநகர் வளர்ச்சி திட்டம், தமிழக நகர்ப்புற வளர்ச்சி திட்டம் ஆகியவற்றில், மக்களுக்கு பல்வேறு பகுதிகளில் மனைகள் ஒதுக்கப்பட்டன. இதன் ஒதுக்கீட்டாளர்கள் உரிய ஆவணங்களை அளித்து, கிரைய பத்திரம் பெற அறிவுறுத்தப்பட்டனர்.
இதன்படி, பெரும்பாலான மக்கள் உரிய ஆவணங்களை அளித்து, தங்கள் பெயருக்கு கிரையப்பத்திரம் பெற்று விட்டனர். இதில், சென்னையில் ஒன்று முதல், 7 வரையிலான கோட்டங்களில், 322 திட்ட பகுதிகளில், 12,495 மனைகள் விடுபட்டது தெரியவந்துள்ளது.
இந்த மனைகளை ஒவ்வொன்றாக சென்று ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டு உள்ளது.
இப்பணியில், வாரியத்தின் சமுதாய பங்கேற்பு உதவியாளர்கள் ஈடுபடுத்தப்படுவர். ஒருவர் தினமும், 25 மனைகள் வீதம், 10 நாட்களில், 250 மனைகள் குறித்த ஆய்வை முடிக்க வேண்டும்.
ஒவ்வொரு மனைக்கும் நேரில் சென்று, அங்கு வசிப்போரிடம் ஆவணங்களை பெற்று, அந்த விபரங்களை அறிக்கையாக அளிக்க வேண்டும்.
கோட்டத்துக்கு கண்காணிப்பாளர் மற்றும் இளநிலை உதவியாளர் நிலையில், பொறுப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். இந்த விபரங்களை மேலதிகாரிகள் மறு ஆய்வு செய்து, அறிக்கை அளிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.