/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கால்வாய், துார்வாரும் பணிகளை செப்டம்பருக்குள் முடிக்க உத்தரவு பருவமழையை எதிர்கொள்ள நடவடிக்கை தலைமை செயலர் சிவ்தாஸ் மீனா தகவல்
/
கால்வாய், துார்வாரும் பணிகளை செப்டம்பருக்குள் முடிக்க உத்தரவு பருவமழையை எதிர்கொள்ள நடவடிக்கை தலைமை செயலர் சிவ்தாஸ் மீனா தகவல்
கால்வாய், துார்வாரும் பணிகளை செப்டம்பருக்குள் முடிக்க உத்தரவு பருவமழையை எதிர்கொள்ள நடவடிக்கை தலைமை செயலர் சிவ்தாஸ் மீனா தகவல்
கால்வாய், துார்வாரும் பணிகளை செப்டம்பருக்குள் முடிக்க உத்தரவு பருவமழையை எதிர்கொள்ள நடவடிக்கை தலைமை செயலர் சிவ்தாஸ் மீனா தகவல்
ADDED : மே 26, 2024 12:16 AM

சென்னை, “சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், மழை நீர் கால்வாய் அமைக்கும் பணி மற்றும் துார் வாரும் பணிகளை, செப்டம்பர் மாதத்திற்குள் முடிக்க, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,” என, தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா தெரிவித்தார்.
நிதி ஒதுக்கீடு
சென்னை மாநகராட்சி, கோடம்பாக்கம் மண்டலம், டாக்டர் நாயர் சாலையில், 4.80 லட்சம் ரூபாய் மதிப்பில், 480 கி.மீ., நீள மழை நீர் கால்வாயில், வண்டல் மண் துார் வாரப்படுகிறது. வார்டு எண் 132க்கு உட்பட்ட சுப்ரமணியன் நகரில், 1.20 லட்சம் ரூபாய் மதிப்பில், வண்டல் துார் வாரப்படுகிறது.
ஆலந்துார் மண்டலம், நங்கநல்லுார் முதல் பிரதான சாலையில் இருந்து கோவளம் வடி நிலம் பகுதியில், 58.97 கோடி ரூபாய் மதிப்பில், மழை நீர் வடிகால்வாய் அமைக்கப்படுகிறது.
நீர்வளத்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை சார்பில், 57.70 கோடி ரூபாயில் பள்ளிக்கரணையில் கால்வாய் அமைக்கப்படுகிறது.
சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை நிதியில், 25 கோடி ரூபாய் மதிப்பில், ஒக்கியம் மடுவு கால்வாய் மேம்படுத்தப்படுகிறது.
சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியம் சார்பில் 615 கோடி ரூபாயில் கொட்டிவாக்கம், பாலவாக்கம், ஈஞ்சம்பாக்கம், நீலாங்கரை பகுதியில் கழிவுநீர் குழாய் பதிக்கும் பணி நடக்கிறது.
நேற்று காலை, இப்பணிகளை தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா ஆய்வு செய்தார். வானிலை ஆய்வு மைய தகவல் அடிப்படையில், தேவையான முன்னெச்சரிக்கை பணிகளை செய்ய வேண்டும் என, சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
பணிகளை விரைவாக முடித்து, பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்றும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில், அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து பணிகளை செய்ய வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டார்.
தொடர்ந்து, ஈஞ்சம்பாக்கம் கடற்கரையில் துாய்மைப்படுத்தும் பணியை பார்வையிட்டு, துாய்மைப் பணியாளர்களுடன் கலந்துரையாடினார்.
அவருடன் சென்னை மாநகராட்சி கமிஷனர் ராதாகிருஷ்ணன், நீர்வளத்துறை பொறுப்பு செயலர் பிரதீப்யாதவ், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை பொறுப்பு செயலர் செந்தில்குமார் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.
தாம்பரம் மாநகராட்சி, சிட்லப்பாக்கம் ஏரியில், 25 கோடி ரூபாய் செலவில் நடந்து வரும் சீரமைப்பு பணிகளை, தலைமை செயலர் சிவ்தாஸ் மீனா, நேற்று ஆய்வு செய்தார்.
பின், 34வது வார்டுக்கு உட்பட்ட ஜட்ஜ் காலனியில் நடந்து வரும் மழைநீர் கால்வாய், இரும்புலியூர் ஏரி கலங்கல் பகுதியில், 96.50 கோடியில் கட்டப்பட்டு வரும் மூடுகால்வாய் பணிகளையும், தலைமை செயலர் ஆய்வு செய்தார்.
தலைமைச் செயலர் அளித்த பேட்டி:
முன்னெச்சரிக்கையாக, சென்னை மாநகரம் மற்றும் சுற்றியுள்ள உள்ளாட்சி அமைப்புகளில், மழை நீர் கால்வாய்களை துார் வாரும் பணி துவக்கப்பட்டுள்ளது. சென்னை தவிர்த்து மற்ற நகரங்களிலும், மழை நீர் கால்வாய்களை துார் வாரும் பணி துவக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு பருவ மழை காலத்திலும், மழை பெய்ய வாய்ப்புள்ளது. எனவே, அனைத்து பகுதிகளிலும், கால்வாய்களை சீரமைத்து வருகிறோம்.
பாதிப்பு வராது
திடீர் மழை வந்தால், அதை எதிர்கொள்ள தயாராக இருக்க, மாவட்ட கலெக்டர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
வடகிழக்கு பருவ மழையின்போது, வடிகால்வாய் பணிகளை நிறுத்தி இருந்தோம். தற்போது அந்த பணிகள் துவக்கப்பட்டு நடந்து வருகின்றன.
அனைத்து துறைகளும் பணிகளை விரைவாக முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. செப்டம்பர் மாதத்திற்குள், அனைத்து பணிகளையும் முடிக்க வேண்டும். எனவே, ஆய்வு செய்து பணிகளை விரைவுப்படுத்தி வருகிறோம்.
ஒவ்வொரு செவ்வாய் கிழமையும் மாநகராட்சி கமிஷனர் தலைமையில், ஒருங்கிணைப்பு கூட்டம் நடத்தப்படுகிறது. மாதம் ஒரு முறை, மாநில அளவிலும் ஒருங்கிணைப்பு கூட்டம் நடத்தப்பட்டு, பணிகள் விரைவுப்படுத்தப்படுகின்றன.
எதிர்பார்க்காத அளவு அதிக மழை வந்தால், சில இடங்களில் தண்ணீர் தேங்கத்தான் செய்யும். இயல்பான மழை இருந்தால், அது பாதிப்பை ஏற்படுத்தாது.
இவ்வாறு, அவர் கூறினார்.