/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
துார் வாரப்படாத மழைநீர் வடிகால் இந்தாண்டும் ஊராட்சிகள் மூழ்கும்?
/
துார் வாரப்படாத மழைநீர் வடிகால் இந்தாண்டும் ஊராட்சிகள் மூழ்கும்?
துார் வாரப்படாத மழைநீர் வடிகால் இந்தாண்டும் ஊராட்சிகள் மூழ்கும்?
துார் வாரப்படாத மழைநீர் வடிகால் இந்தாண்டும் ஊராட்சிகள் மூழ்கும்?
ADDED : செப் 01, 2024 01:24 AM

செங்குன்றம்:ஆக்கிரமிப்புகளை அகற்றி, துார் வாரப்படாத கால்வாயால், இந்தாண்டும் தீர்த்தகிரையம்பட்டு, விளாங்காடுபாக்கம் ஊராட்சிகள் வெள்ளத்தால் பாதிக்கும்
சென்னை புழல் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட தீர்த்தகிரையம்பட்டு, விளாங்காடுபாக்கம் ஊராட்சிகள், ஒவ்வொரு ஆண்டும் வடகிழக்கு பருவ மழையின் போது, வெள்ளத்தால் பாதிக்கப்படுகின்றன.
சோழவரம், சிறுணியம், நல்லுார், பாடியநல்லுார் சுற்று வட்டாரங்களில் இருந்து வெளியேறும் வெள்ள நீர் தீர்த்தகிரையம்பட்டு, குமரன் நகர், பள்ளிக்குப்பம், தர்காஸ், மல்லிமாநகர், கன்னம்பாளையம், வண்ணப்புத்துார், சிறுகாவூர் ஏரிகள் மற்றும் விளாங்காடுபாக்கம் வழியாக, 8 கி.மீ., துாரம் கடந்து, புழல் ஏரி உபரிநீர் வடிகாலில் பாயும்.
ஆனால், கடந்த சில ஆண்டுகளில், மேற்கண்ட கால்வாய் பல இடங்களில் ஆக்கிரமிப்பில் சிக்கியுள்ளது. மீதியுள்ள கால்வாயும் துார் வாரப்படாமல், துார்ந்து போய் உள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் பருவமழையின் போது ஏற்படும் வெள்ளத்தால், மேற்கண்ட ஊராட்சிகள் கடுமையாக பாதிக்கப்படுவது தொடர்கதையாக உள்ளது.
ஒவ்வொரு முறையும் பாதிப்பின் போது அங்கு செல்லும் பொன்னேரி தாலுகா வருவாய்த்துறை அதிகாரிகள், 'சம்பிரதாயமாக' சில ஆக்கிரமிப்புகளை மட்டும் அகற்றி, கால்வாயை சீரமைக்க அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கு உத்தரவிட்டுச் செல்வர்.
மழை ஓய்ந்த பிறகு, மீண்டும் கால்வாய் ஆக்கிரமிப்புகள் குறித்து, அவர்கள் ஆய்வு செய்து உறுதியான நடவடிக்கை எடுப்பதில்லை.
ஊராட்சி நிர்வாகமும், கால்வாய் ஆக்கிரமிப்புகளை கண்டுகொள்ளாமல், மழை காலத்திற்கு முன், அவற்றை துார் வாருவதும் இல்லை.
இந்நிலையில், ஆக்கிரமிப்புகளை அகற்றி, துார் வாரப்படாத கால்வாயால், இந்தாண்டும் தீர்த்தகிரையம்பட்டு, விளாங்காடுபாக்கம் ஊராட்சிகள் வெள்ளத்தால் பாதிக்கும் நிலையில் உள்ளன.
கால்வாய்களை துார் வார வேண்டும் என, சமூக ஆர்வலர்கள், கடந்த ஜூன் மாதம், பொன்னேரி தாலுகாவில் நடந்த ஜமாபந்தியில் கோரிக்கை மனு கொடுத்தனர்.
ஆனால் இதுவரை, வருவாய்த்துறையோ, புழல் ஊராட்சி ஒன்றிய நிர்வாகமோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், இந்தாண்டும் மேற்கண்ட ஊராட்சிகள் மழை வெள்ள பாதிப்பில் சிக்காமல் மக்களை காக்க, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை வலுத்துள்ளது.