/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ரயில் நிலைய நடைமேம்பாலம் இருந்தும் பயன்படுத்தாத பயணியரால் ஆபத்து
/
ரயில் நிலைய நடைமேம்பாலம் இருந்தும் பயன்படுத்தாத பயணியரால் ஆபத்து
ரயில் நிலைய நடைமேம்பாலம் இருந்தும் பயன்படுத்தாத பயணியரால் ஆபத்து
ரயில் நிலைய நடைமேம்பாலம் இருந்தும் பயன்படுத்தாத பயணியரால் ஆபத்து
ADDED : ஆக 16, 2024 12:26 AM

ஆவடி, அண்ணனுார் ரயில் நிலையத்தில், எல்.சி., கேட் - 7 கடவுப்பாதை உள்ளது. கடந்த 2020ல், அண்ணனுார் -- அயப்பாக்கத்தை இணைக்கும் விதமாக, உயர்மட்ட மேம்பாலம் திறக்கப்பட்ட பின், எல்.சி., கேட் - 7 கடவுப்பாதை மூடப்பட்டது.
இதையடுத்து, பொதுமக்கள் தண்டவாளத்தை கடக்கும்போது ஏற்படும் விபத்துகளை தவிர்க்க, அண்ணனுார் ரயில் நிலையம் சுற்றி இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.
முதியோர் அவதி
தொடர்ந்து, பயணியர் பயன்பாட்டிற்காக இரண்டு நடைமேடைகளை இணைக்கும் விதமாக, 49 படிகளுடன், 61 அடி உயரத்தில் நடைமேம்பாலம், கடந்தாண்டு திறக்கப்பட்டது.
ஆனால், நடைமேம்பாலம் உயரமாக இருப்பதால், முதியோர், குழந்தைகள் மற்றும் உடைமைகளுடன் வருவோர் கடும் அவதிக்குள்ளாகின்றனர். அவர்கள், ஆபத்தை உணராமல், தடுப்புகளை தாண்டி தண்டவாளங்கள் வழியாக ரயில் நிலையம் செல்கின்றனர். இதனால், விபத்து உயிர்பலி அசம்பாவிதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.
எனவே, இந்த பிரச்னைக்கு தீர்வு காண அண்ணனுார் ரயில் நிலையத்தில், 'லிப்ட்' வசதி ஏற்படுத்த வேண்டும் என கோரிக்கை வலுத்துள்ளது.
அதுமட்டுமல்லாமல் நடைமேம்பாலத்தில் ஏறிச் செல்ல தயங்கி, பெரும்பாலானோர் அண்ணனுார் கடவுப்பாதை வழியாக ரயில் நிலையம் செல்கின்றனர்.
வழிப்பறி அபாயம்
இரவு வேளைகளில் தெருவிளக்கு வெளிச்சமின்றி கும்மிருட்டாக மாறிவிடுவதால், புதர் மண்டிய அப்பகுதி சமூக விரோதிகளின் புகலிடமாக மாறிவிடுகிறது. வழிப்பறி உள்ளிட்ட குற்றச்சம்பவங்கள் அடிக்கடி அரங்கேறுவதாகவும் குற்றச்சாட்டு உள்ளது.
இந்த நிலையில், கடந்த 9ம் தேதி, அவ்வழியாக சென்ற தனியார் பள்ளி ஆசிரியரை தாக்கி, மர்ம நபர்கள் வழிப்பறியில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.
எனவே, அப்பகுதியில் சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும். அதேபோல, போலீசார் தினமும் ரோந்து செல்ல வேண்டும் என, கோரிக்கை வலுத்து உள்ளது.

