/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வீடு ஒப்படைக்காத நிறுவனத்திற்கு அபராதம்
/
வீடு ஒப்படைக்காத நிறுவனத்திற்கு அபராதம்
ADDED : ஆக 31, 2024 12:24 AM
சென்னை, செங்கல்பட்டு மாவட்டம் நின்னகரை கிராமத்தில், ஆர்.வி.எஸ்., டெவலப்பர்ஸ் என்ற நிறுவனம் சார்பில் குடியிருப்பு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அத்திட்டத்தில் வீடு வாங்க, ஜே.தனம் என்பவர், 2014ல் ஒப்பந்தம் செய்தார்.
இதற்காக பல்வேறு தவணைகளாக, 13.50 லட்ச ரூபாய் செலுத்தினார். ஆனால், கட்டுமான நிறுவனம் குறிப்பிட்ட காலத்தில் பணிகளை முடித்து வீட்டை ஒப்படைக்கவில்லை.
இது குறித்து ஜே.தனம் அளித்த புகார் அடிப்படையில், ரியல் எஸ்டேட் ஆணைய உறுப்பினர் சுனில்குமார் தலைமையிலான அமர்வு பிறப்பித்த உத்தரவு:
கட்டுமான நிறுவனம் குறிப்பிட்ட கால கெடுவுக்குள் வீட்டை ஒப்படைக்கவில்லை என்பது உறுதியாகிறது. எனவே, வீடு வாங்குவதற்காக செலுத்திய பணத்தை திரும்ப பெற மனுதாரருக்கு உரிமை உள்ளது.
மனுதாரர் செலுத்திய, 13.50 லட்ச ரூபாயை கட்டுமான நிறுவனம் வட்டியுடன் திருப்பித்தர வேண்டும். இந்த குறிப்பிட்ட திட்டத்தை பதிவு செய்வது தொடர்பான ரியல் எஸ்டேட் சட்ட விதிகளை, கட்டுமான நிறுவனம் மீறியுள்ளது உறுதியாகிறது.
எனவே, கட்டுமான நிறுவனத்துக்கு, 1 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது. இத்திட்டத்தை பதிவு செய்வதற்கான விண்ணப்பத்தை கட்டுமான நிறுவனம், 30 நாட்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.