/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஆபத்தை உணராமல் தண்டவாளத்தை கடக்கும் மக்கள் சுரங்கப்பாதை பணியை விரைந்து முடிக்க வலியுறுத்தல்
/
ஆபத்தை உணராமல் தண்டவாளத்தை கடக்கும் மக்கள் சுரங்கப்பாதை பணியை விரைந்து முடிக்க வலியுறுத்தல்
ஆபத்தை உணராமல் தண்டவாளத்தை கடக்கும் மக்கள் சுரங்கப்பாதை பணியை விரைந்து முடிக்க வலியுறுத்தல்
ஆபத்தை உணராமல் தண்டவாளத்தை கடக்கும் மக்கள் சுரங்கப்பாதை பணியை விரைந்து முடிக்க வலியுறுத்தல்
ADDED : மே 06, 2024 01:39 AM

வண்ணாரப்பேட்டை:சென்னை, பழைய வண்ணாரப்பேட்டையில், சீனிவாசபுரம் குடிசை பகுதி, மின்ட் மார்டன் தெரு, போஜராஜன் நகர், பெஜவாடா லைன் பகுதிகளில், ஆயிரக்கணக்கான குடியிருப்புகளில் லட்சக்கணக்கான மக்கள் வசிக்கின்றனர். இப்பகுதியையொட்டி கொருக்குப்பேட்டை ரயில்வே தண்டவாளம் செல்கிறது.
இதில் தினமும் 50க்கும் மேற்பட்ட ரயில்கள் வந்து செல்வதால், அரை மணி நேரத்திற்கு ஒருமுறை, ரயில்வே 'கேட்' மூடப்படுகிறது.
இதனால், சுற்றுவட்டார மக்கள் பெரிதும் அவதியடைகின்றனர். 'பீக்- ஹவர்' வேளைகளில், மாணவர்களும், தனியார் நிறுவன ஊழியர்களும் குறித்த நேரத்திற்கு செல்ல முடியாத நிலை உள்ளது. அவ்வழியாக செல்லும் சரக்கு ரயில்கள் நீண்ட நேரம் தண்டவாளத்தில் நிற்பதால், பொதுமக்கள் ஆபத்தான வகையில் ரயிலுக்கு அடியில் குனிந்து, விபரீதம் உணராமல் ஆபத்தான முறையில், தண்டவாளத்தை கடந்து செல்கின்றனர்.
இந்த பகுதியில் சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் என, பல போராட்டங்கள் நடந்தன.
அடுத்தடுத்து தடை
இதையடுத்து, 2010ல் போஜராஜன் நகரில் சுரங்கப்பாதை அமைக்கப்படும் என, தி.மு.க., ஆட்சியில் அறிவிக்கப்பட்டது. பணிகளும் துவங்கின. ஆமை வேகத்தில் நடந்த பணிகள், திடீரென கிடப்பில் போடப்பட்டன.
பின், 2011ல், அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், 7 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி, சுரங்கப்பாதை அமைக்கும் பணி துவங்கியது. ஆறு மாதங்கள் பணி நடந்த நிலையில், மீண்டும் நிறுத்தப்பட்டது. அதன்பின், 2018ல், துவங்கிய சுரங்கப்பாதை பணி, ஆமை வேகத்தில் நடந்த நிலையில் மீண்டும் இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது.
இதையடுத்து, இந்த நீண்ட கால பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், 13 கோடி ரூபாய் மதிப்பீட்டில், பழைய வண்ணாரப்பேட்டை, போஜராஜன் சுரங்கப்பாதையுடன் கண்ணன் தெருவை இணைக்கும் வகையில் ரயில்வே சுரங்கப்பாதைக்கு, 2022, அக்டோபரில் அடிக்கல் நாட்டு விழா நடந்தது.
போஜராஜன் நகர் சுரங்கப்பாதையின் மொத்த நீளம் 207 மீட்டராகும். இதில், 37 மீ., ரயில்வே நிர்வாகத்தாலும், 170 மீட்டர் சென்னை மாநகராட்சியாலும் அமைக்கப்பட்டு வருகிறது.
இதில், போஜராஜன் நகர் பகுதியில், எண்ணெய் குழாய்கள், குடிநீர் மற்றும் கழிவுநீர் குழாய்கள் மாற்றும் பணிகள் முடிவடைந்துள்ளது. கண்ணன் தெருவில் எண்ணெய் குழாய்கள் மாற்றும் பணிகள் முடிவடைந்த நிலையில், குடிநீர் மற்றும் கழிவுநீர் குழாய்கள் அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடக்கிறது.
இந்திய ஆயில் கார்ப்பரேஷன் சார்பில், 5 கி.மீ., துாரத்திற்கு செல்லும் எண்ணெய் குழாய்கள் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு, போஜராஜன் நகர் சுரங்கப்பாதைக்கு கீழே கொண்டு செல்லும் பணிகள் முடிவடைந்துள்ளன. போஜராஜன் நகர், கண்ணன் தெருவை இணைக்கும் ரயில்வே சுரங்கப்பாதை பணி துரிதமாக நடக்கிறது.
தற்போது, குடிநீர் வாரியம் சார்பில் குடிநீர் மற்றும் கழிவுநீர் குழாய்கள் சுரங்கப் பாதைக்கு கீழே கொண்டு செல்லும் பணிகள் நடக்கின்றன. அடுத்த மூன்று மாதங்களில் அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு, மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படும்.
-'ஐட்ரீம்' மூர்த்தி, எம்.எல்.ஏ., ராயபுரம்.