/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கல்லுாரிக்கு லீசுக்கு விட்ட கோவில் நிலத்தின் அறிவிப்பாணையை எதிர்த்த மனு தள்ளுபடி
/
கல்லுாரிக்கு லீசுக்கு விட்ட கோவில் நிலத்தின் அறிவிப்பாணையை எதிர்த்த மனு தள்ளுபடி
கல்லுாரிக்கு லீசுக்கு விட்ட கோவில் நிலத்தின் அறிவிப்பாணையை எதிர்த்த மனு தள்ளுபடி
கல்லுாரிக்கு லீசுக்கு விட்ட கோவில் நிலத்தின் அறிவிப்பாணையை எதிர்த்த மனு தள்ளுபடி
ADDED : பிப் 26, 2025 12:16 AM
சென்னை, மயிலாப்பூர், கபாலீஸ்வரர் கோவில் நிதியில் இருந்து, முதல்வரின் தொகுதியான கொளத்துாரில் கலை, அறிவியல் கல்லுாரி அமைக்க ஏதுவாக, கொளத்துார் சோமநாதசுவாமி கோவிலுக்கு சொந்தமான 2.50 ஏக்கர் நிலத்தை, 25 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு வழங்குவது என, கடந்தாண்டு செப்டம்பரில் அறிவிப்பாணை வெளியிடப்பட்டது.
இந்த அறிவிப்பாணையை ரத்து செய்யக்கோரி, சோமநாதசுவாமி கோவில் பக்தரான மயிலாப்பூரைச் சேர்ந்த டி.ஆர்.ரமேஷ், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு விசாரணை, நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், சி.குமரப்பன் அடங்கிய அமர்வில் நடந்தது.
அப்போது, மனுதாரரான டி.ஆர்.ரமேஷ் ஆஜராகி, ''தற்போதைய வழிகாட்டி மதிப்பின் அடிப்படையில், இந்த நிலத்துக்கு மாதம் 5.12 லட்சம் ரூபாய் வாடகையாக நிர்ணயம் செய்ய வேண்டும்.
''ஆனால், 3.19 லட்சம் ரூபாய் மட்டுமே வாடகையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கோவிலுக்கு ஒரு மாதத்துக்கு 1.93 லட்சம் ரூபாய் வரை இழப்பு ஏற்படும். எனவே, இதுதொடர்பான அறிவிப்பாணையை ரத்து செய்ய வேண்டும்,'' என்றார்.
இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
அறிவிப்பாணையில் சில நடைமுறை மீறல்கள் உள்ளன என்பதில் சந்தேகமில்லை. இருப்பினும், நடைமுறை மீறல்களை விட, நன்மைகள் அதிகமாக இருப்பது தெரிகிறது.
எனவே, இவ்விவகாரத்தில் தலையிடுவதற்கு, இது பொருத்தமான வழக்கு அல்ல என, நீதிமன்றம் கருதுகிறது.
இருப்பினும், கடந்த 2021 நவ., 15ல் வழக்கு ஒன்றில் டிவிஷன் பெஞ்ச் பிறப்பித்த வழிகாட்டுதல்களை, அறநிலையத்துறை பின்பற்ற வேண்டும்.
இவ்விவகாரம், அந்த வழக்கின் இறுதி உத்தரவுக்கு உட்பட்டது. மேல்முறையீடு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

