/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
செம்பாக்கம் ஏரி சீரமைப்பு வரைவு திட்டம்... தயார்! பொழுதுபோக்கு அம்சமும் ஏற்படுத்த முடிவு
/
செம்பாக்கம் ஏரி சீரமைப்பு வரைவு திட்டம்... தயார்! பொழுதுபோக்கு அம்சமும் ஏற்படுத்த முடிவு
செம்பாக்கம் ஏரி சீரமைப்பு வரைவு திட்டம்... தயார்! பொழுதுபோக்கு அம்சமும் ஏற்படுத்த முடிவு
செம்பாக்கம் ஏரி சீரமைப்பு வரைவு திட்டம்... தயார்! பொழுதுபோக்கு அம்சமும் ஏற்படுத்த முடிவு
ADDED : ஜூன் 26, 2024 11:16 PM

சென்னை, சென்னை அடுத்த, தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட செம்பாக்கம் ஏரி மறுசீரமைப்பிற்கான, வடிவமைப்பு மற்றும் வரைவு திட்டம் தயாரிக்கப்பட்டு உள்ளது.
சென்னை புறநகரில் பல்வேறு இடங்களில், பாசனத்திற்காக உருவாக்கப்பட்ட ஏரிகள், முறையான பராமரிப்பு இல்லாமல், பாழாகி வருகின்றன.
ஆக்கிரமிப்புகள், குப்பை மற்றும் கழிவுகள் குவிக்கப்படுவதால், இந்த ஏரிகள் முழுமையாக அழிவின் விளிம்பிற்கு தள்ளப்பட்டு உள்ளன.
ரூ.100 கோடி
இந்நிலையில், இந்த ஏரிகளின் இயற்கையான வழித்தடங்களை கண்டுபிடித்து ஒருங்கிணைப்பதன் வாயிலாக, புறநகர் பகுதியில் வெள்ள பாதிப்பை தடுக்கலாம் என பரிந்துரைக்கப்பட்டது.
இதன் அடிப்படையில், புறநகரில் உள்ள ஏரிகளை சீரமைத்து ஒருங்கிணைக்கும் திட்டம், நீர்வளத்துறையின் பரிசீலனையில் உள்ளது.
இந்த பின்னணியில், சென்னை பெருநகரில் முடிச்சூர் ஏரி, மாடம்பாக்கம் ஏரி, செம்பாக்கம் ஏரி, வேளச்சேரி ஏரி, ஆதம்பாக்கம் ஏரி, ரெட்டேரி, அயனம்பாக்கம் ஏரி, புழல், கொளத்துார் ஏரி ஆகியவற்றின் கரைப் பகுதிகளை சீரமைத்து, பொழுதுபோக்கு மையங்களாக மேம்படுத்த திட்டமிடப்பட்டது.
இத்திட்டத்தை, 100 கோடி ரூபாயில் செயல்படுத்த, சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமமான சி.எம்.டி.ஏ., நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதற்காக, கலந்தாலோசகர்கள் தேர்வு செய்யப்பட்டு, வடிவமைப்பு மற்றும் வரைவு திட்டங்கள் தயாரிக்கப்பட்டன.
இந்த வகையில் ஏற்கனவே, முடிச்சூர் ஏரிக்கான வரைவு திட்டம், வடிவமைப்பு தயாரிக்கப்பட்ட நிலையில், தற்போது செம்பாக்கம் ஏரிக்கான வரைவு திட்டம், வடிவமைப்பு தயாரிக்கப்பட்டு உள்ளது.
பரிந்துரை
அத்துடன் இந்த ஏரிக்கு, எந்தெந்த பகுதிகள் வாயிலாக, கழிவுநீர் வருகிறது என்பதும் கணக்கிடப்பட்டு உள்ளது.
இதன் அடிப்படையில், அந்தந்த இடங்களில் வரும் கழிவுநீரின் அளவு கணக்கிடப்பட்டு, அதற்கு ஏற்ற வகையில் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்க பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.
இதற்கு அடுத்தபடியாக, ஏரியின் கரையோரத்தில் நடைபயிற்சிக்கான இடம், பொதுமக்கள் பயன்பாட்டுக்கான பொழுதுபோக்கு வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளன.
சிறுவர் விளையாட்டுத்திடல், பொதுமக்களுக்கான கழிப்பறை வசதிகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள், இங்கு ஏற்படுத்தப்பட உள்ளன.
தனியார் கலந்தாலோசகர் வாயிலாக, இதற்கான வடிவமைப்பு இறுதி செய்யப்பட்டுள்ளதாக, சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.