/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கால்வாய் ஆக்கிரமிப்பு இரு கோவில்கள் அகற்றம்
/
கால்வாய் ஆக்கிரமிப்பு இரு கோவில்கள் அகற்றம்
ADDED : மார் 01, 2025 12:53 AM

சென்னை,
தேனாம்பேட்டை மண்டலத்திற்கு உட்பட்ட, திரு.வி.க., குடியிருப்பு பகுதியில் உள்ள மாம்பலம் கால்வாயை ஆக்கிரமித்து, 48 ஆண்டுகளுக்கு முன் அம்மன் மற்றும் விநாயகர் கோவில்கள் கட்டப்பட்டன. இந்த கோவில்களால், மழைக்காலங்களில் கால்வாயில் நீரோட்டம் தடைபட்டது.
நீரோட்டத்துக்கு தடையாக உள்ள கோவில்களை அகற்ற, உதவி செயற்பொறியாளர் வித்யா முடிவு செய்தார். இதையறிந்த பா.ஜ.,வினர், நான்கு நாட்களுக்குமுன், மாநகராட்சி அதிகாரிகளிடம் தகராறு செய்தனர். அவர்களை, கோவிலுக்கு அழைத்துச் சென்று, கால்வாய் நீரோட்டம் தடைபடுவதால், மக்கள் பாதிப்பது குறித்து, அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதையடுத்து, நேற்று அம்மன் மற்றும் விநாயகர் சிலைகளை எடுத்து, கோவிலை பராமரித்து வந்த சுமன் என்பவரிடம் ஒப்படைத்தனர். பின், கோவில் கட்டமைப்புகளை இடித்து அகற்றினர்.
இதுகுறித்து, உதவி செயற்பொறியாளர் வித்யா கூறுகையில், ''500 சதுர அடியில் அம்மன் கோவிலும், 150 சதுர அடியில் விநாயகர் கோவிலும் கால்வாயை ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்தன. அவற்றை அகற்றி உள்ளோம். இரண்டு கோவில்களுக்கு இடையே வளர்ந்த அரச மரத்தின் கிளைகளையும் வெட்டியுள்ளோம்,'' என்றார்.