/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
8 ஏரிகள் சீரமைப்பு அக்டோபரில் முடியும்: சி.எம்.டி.ஏ., விளக்கம்
/
8 ஏரிகள் சீரமைப்பு அக்டோபரில் முடியும்: சி.எம்.டி.ஏ., விளக்கம்
8 ஏரிகள் சீரமைப்பு அக்டோபரில் முடியும்: சி.எம்.டி.ஏ., விளக்கம்
8 ஏரிகள் சீரமைப்பு அக்டோபரில் முடியும்: சி.எம்.டி.ஏ., விளக்கம்
ADDED : மார் 05, 2025 03:13 AM
சென்னை:'சென்னையில் எட்டு ஏரிகளை சீரமைக்கும் பணிகள், நடப்பு ஆண்டு அக்டோபர் இறுதிக்குள் முடிக்கப்படும்,'' என, சி.எம்.டி.ஏ., உறுப்பினர் செயலர் எஸ்.பிரபாகர் தெரிவித்தார்.
சென்னை புறநகரில் உள்ள ஏரிகளை சீரமைக்க, 250 கோடி ரூபாய் ஒதுக்கியும், பணிகள் சரியாக நடக்காததால், தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உள்ளதாக, சமூக ஆர்வலர்களும், பொது நல அமைப்புக்களும் குற்றம் சாட்டின. இதுகுறித்து, நமது நாளிதழில், மார்ச் 1ல் செய்தி வெளியானது.
இது தொடர்பாக, சி.எம்.டி.ஏ., உறுப்பினர் செயலர் எஸ்.பிரபாகர் வெளியிட்ட விளக்க அறிக்கை:
சென்னை பெருநகரில் ஏரிக்கரைகள் மற்றும் நீர்நிலையோர மேம்பாட்டு திட்டங்கள், 100 கோடி ரூபாய் மதிப்பில் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
இதன் ஒரு பகுதியாக, பெரும்பாக்கம், ரெட்டேரி, முடிச்சூர், மாடம்பாக்கம், செம்பாக்கம், அயனம்பாக்கம், வேளச்சேரி, ஆதம்பாக்கம், புழல் ஆகிய ஏரிகள் தேர்வு செய்யப்பட்டன. இதில், நீர் வளத்துரை பரிந்துரை அடிப்படையில், கொளத்துார் ஏரியும் சேர்க்கப்பட்டது.
இதன்படி, பெரும்பாக்கம், வேளச்சேரி, முடிச்சூர், புழல், ரெட்டேரி, அயனம்பாக்கம், கொளத்துார், சீக்கானன் ஏரி ஆகியவற்றில் சீரமைப்பு பணிகள் துவங்கி, நடந்து வருகின்றன. இப்பணிகள் அனைத்தும், வரும் அக்டோபர் இறுதிக்குள் முடிந்துவிடும் என்று எதிர்பார்க்கிறோம்.
ஆதம்பாக்கம், செம்பரம்பாக்கம் ஏரிகளில், மாடுலர் எஸ்.டி.பி., முறையில், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை அமைப்பதற்கான இடம், நீர்வளத் துறையுடன் இணைந்து இறுதி செய்யப்பட்டு வருகிறது.
பெருங்குடி, போரூர் ஏரிகளுக்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது. நீர் நிலைகளை பாதுகாத்து மீட்டு எடுக்கும் தொலை நோக்கு பார்வையுடன், சி.எம்.டி.ஏ., இத்திட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறது. நீர்நிலைகளின் சுற்றுச்சூழல் மறுசீரமைப்பு மற்றும் நிலையான வளர்ச்சிக்கு சி.எம்.டி.ஏ., உறுதி பூண்டுள்ளது.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.