/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஏர்போர்ட்டில் முதியோர் அலைச்சல் வாடகை கார் ஓட்டுனர்கள் புகார்
/
ஏர்போர்ட்டில் முதியோர் அலைச்சல் வாடகை கார் ஓட்டுனர்கள் புகார்
ஏர்போர்ட்டில் முதியோர் அலைச்சல் வாடகை கார் ஓட்டுனர்கள் புகார்
ஏர்போர்ட்டில் முதியோர் அலைச்சல் வாடகை கார் ஓட்டுனர்கள் புகார்
ADDED : ஆக 09, 2024 12:36 AM

சென்னை,சென்னை விமான நிலையத்தில், பயணியருக்கான 'பிக் - அப் பாயின்ட்' பகுதி, சில வாரங்களுக்கு முன் 1 கி.மீ., தொலைவில் உள்ள 'மல்டி லெவல் கார் பார்க்கிங்' பகுதிக்கு மாற்றப்பட்டது. இதனால் பேட்டரி வாகனங்கள், லிப்ட் போன்றவற்றுக்கு காத்திருப்பதால், பயணியர் அவதிப்பட்டனர்.
இந்நிலையில், நேற்று மதியம் 2:00 மணிக்கு, உள்நாட்டு வருகை பகுதியில் இருந்து முதியவர் துரைசாமி, 75, தன் மகள்களுடன் வந்தார். அவர்கள், ப்ரிபெய்டு டாக்சியில் வீட்டிற்கு செல்ல பதிவு செய்திருந்தனர்.
ஆனால், பேட்டரி வாகனத்திற்கு நீண்ட நேரம் காத்திருக்க நேரிட்டதால், புதிய பிக் - அப் பாயின்ட் பகுதிக்கு நடந்து சென்றார்.
அப்போது அவருக்கு, திடீரென வலிப்பு ஏற்பட்டது. இதையடுத்து, சக பயணியர் மற்றும் கால்டாக்சி ஓட்டுனர்கள் அவரை, பேட்டரி வாகனத்தை வரவழைத்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
முதியோர் மற்றும் நோயாளிகளை காரில் ஏற்றிச் செல்ல முனையம் வரை வரலாம் என, சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இருப்பினும், வாடகை கார் ஓட்டுனர்களை, தனியார் ஒப்பந்ததார ஊழியர்கள் அனுமதிப்பது இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கால்டாக்சி ஓட்டுனர்கள் கூறியதாவது:
சென்னை விமான நிலைய பிக் அப் பாயின்ட் செல்ல முதியவர்கள் மற்றும் நோயாளிகள், பேட்டரி வாகனங்களுக்கு காத்திருக்கவும், நடந்து செல்லவும் சிரமப்படுகின்றனர். அவர்களுக்கு உதவ முனையம் வரை வாடகை கார்களை அனுமதிக்கலாம்.
ஆனால், தனியார் செயலி கால்டாக்சி ஓட்டுனர்கள், விமான நிலைய ப்ரிப்பெய்ட் டாக்சி ஓட்டுனர்களை, விமான நிலைய அதிகாரிகள் அனுமதிக்க மறுக்கின்றனர். அபராதம் விதிப்போம், வாகனத்தை பறிமுதல் செய்வோம் என, மிரட்டுகின்றனர். இதனால், பயணியருக்கு அவசரத்திற்கு கூட வாடகை கார் ஓட்டுனர்கள் உதவ முடியவில்லை.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
சென்னை விமான நிலைய அதிகாரிகள் கூறுகையில், 'முதியோர் மற்றும் நோயாளிகளை, விமான நிலைய முனையத்தின் வெளியே வந்து டாக்சி ஒட்டுனர்கள் ஏற்றி செல்ல அனுமதித்துள்ளோம். சிலர் இதை பயன்படுத்தி நெடுநேரம் அங்கேயே வாகனங்களை நிறுத்தி வைப்பதால் தான் பிரச்னைகள் ஏற்படுகின்றன' என்றனர்.