/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வீராணம் குடிநீர் குழாயில் ஏற்பட்ட கசிவு சீரமைப்பு
/
வீராணம் குடிநீர் குழாயில் ஏற்பட்ட கசிவு சீரமைப்பு
ADDED : மார் 03, 2025 12:51 AM
சென்னை,
சென்னையின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய, வீராணம் ஏரியில் இருந்து சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், 228 கி.மீ., துாரம் பயணித்து, சென்னைக்கு வருகிறது.
இதற்காக, 1,875 மி.மீ., விட்டம் கொண்ட குழாயில் வரும் குடிநீர், கேளம்பாக்கம் நீர்த்தேக்க தொட்டியில் தேக்கி, அங்கிருந்து, ஓ.எம்.ஆர்., மற்றும் போரூர் பகுதிக்கு இரண்டு குழாய் இணைப்பு வழியாக செல்கிறது.
நெம்மேலி கடல்நீரை குடிநீராக்கும் திட்ட குழாயுடன், வீராணம் குடிநீர் குழாய் கேளம்பாக்கம் பகுதியில் இணைக்கப்பட்டு உள்ளது.
கோடையில், குடிநீர் பற்றாக்குறை ஏற்படும்போது, நெம்மேலி குடிநீர் வழங்கும் வகையில் குழாய் இணைக்கப்பட்டது.
கேளம்பாக்கத்தில் வீராணம் குடிநீர் சேமிக்கும் தொட்டி மற்றும் குழாயில் கசிவு ஏற்பட்டதால், சென்னையின் குறிப்பிட்ட பகுதியில், சில தினங்களாக குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.
பற்றாக்குறை அதிகரித்த பகுதிகளில், குழாய் இணைப்பை மாற்றி அமைத்தும், லாரி குடிநீர் வழங்கியும் சமாளித்தனர்.
இது குறித்து, குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறியதாவது:
வீராணம் குடிநீர் வரும் குழாயில் ஏற்பட்ட கசிவை கண்டுபிடித்து, சரி செய்வதில் தாமதம் ஏற்பட்டது. தற்போது முழுதும் சரி செய்யப்பட்டது. அனைத்து பகுதிகளுக்கும் சீராக குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. கோடையில் பற்றாக்குறை இல்லாமல் குடிநீர் வழங்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.