ADDED : ஆக 08, 2025 07:43 PM

சென்னை: கடலூரில் அரசு ஊழியர் ஒருவர் தாக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ள தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை, 'மிரட்டல், வன்முறை ஆகியவற்றை இயல்பாக்கும் வகையில் அரசியல் கலாசாரத்தை திமுக உருவாக்கி உள்ளது,'' எனக்கூறியுள்ளார்.
கடலூர் மாவட்டம் புவனகிரி பேரூராட்சி அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணியாற்றும் ராதாகிருஷ்ணன் என்பவருக்கும், விடுதலை சிறுத்தைகள் கட்சி கவுன்சிலர் காளிமுத்துவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இது தொடர்பாக ராதாகிருஷ்ணன் என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் காளிமுத்து மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது தொடர்பாக தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: அலுவலகத்தில் அரசு அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தப்படுவது என்பது, நிர்வாகத்தின் தோல்வி மட்டும் அல்ல. மக்களைப் பாதுகாக்க வடிவமைக்கப்பட்ட அமைப்பின் மீதான நம்பிக்கை சீர்குலைவு ஆகும்.
புவனகிரியில் அதிர்ச்சி அளிக்கும் சம்பவமாக, அரசு அதிகாரி ஒருவரை, திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி கவுன்சிலர் கடுமையாக தாக்கியதுடன் ஆபாசமான வார்த்தைகளால் திட்டியுள்ளார். தாக்குதலுக்கு பிறகு மிரட்டியும் சென்றுள்ளார்.
இது கடந்த 4 ஆண்டுகளில் தமிழகத்தில் நடந்த சட்டவிரோதமான ஒரு சம்பவம் மட்டும் அல்ல. மிரட்டல், வன்முறை மற்றும் பொது அமைப்புகளை புறக்கணிப்பதை இயல்பாக்கும் வகையில் திமுக உருவாக்கிய அரசியல் கலாசாரத்தின் பிரதிபலிப்பு ஆகும். இவ்வாறு அந்த பதிவில் அண்ணாமலை கூறியுள்ளார்.