/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
குடிநீர் குழாய், பாதாள சாக்கடை பணிகள் முடிந்த பின் சாலை அமைக்க கோரிக்கை
/
குடிநீர் குழாய், பாதாள சாக்கடை பணிகள் முடிந்த பின் சாலை அமைக்க கோரிக்கை
குடிநீர் குழாய், பாதாள சாக்கடை பணிகள் முடிந்த பின் சாலை அமைக்க கோரிக்கை
குடிநீர் குழாய், பாதாள சாக்கடை பணிகள் முடிந்த பின் சாலை அமைக்க கோரிக்கை
ADDED : மே 23, 2024 12:44 AM
நெற்குன்றம்,நெற்குன்றத்தில் இரு வார்டுகளில், குடிநீர் மற்றும் பாதாள சாக்கடை பணிகளை முழுதாக முடித்து, அதன் பின் தார்ச்சாலை அமைக்க வேண்டுமென, பகுதிமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வளசரவாக்கம் மண்டலத்தில் உள்ள நெற்குன்றம் பகுதி ஊராட்சியாக இருந்த போது, கடந்த 2010ல் ஜவஹர்லால் நேரு தேசிய நகர்ப்புற புனரமைப்புத் திட்டத்தின் கீழ், 19 கோடி ரூபாய் மதிப்பில், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் குடிநீர் குழாய்கள் பதிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
பின், கடந்த 2012ல் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டு, 148வது வார்டு, கங்கையம்மன் கோவில் குளத்திலும், லட்சுமி நகரிலும், 145வது வார்டு மாதா கோவில் தெருவிலும், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டும் பணிகள் நடந்து வந்தன.
இந்நிலையில், 2017ல், மூலப்பொருட்களின் விலை உயர்வு மற்றும் பல்வேறு காரணங்களால், பணிகளை தொடர முடியாது என, ஒப்பந்ததாரர்கள் தெரிவித்ததால், நீர்த்தேக்கத் தொட்டி கட்டும் பணி தடைபட்டது.
இதையடுத்து, மீண்டும் 2018ல் புதிதாக, 15 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் கோரப்பட்டு, பணிகள் நடந்து வருகின்றன. மேலும், 2015 வெள்ளத்திற்குப் பின், 2016 மற்றும்- 2017ல் இந்த இரு வார்டுகளிலும், மழைநீர் வடிகால் கட்டும் பணி நடந்தது.
இதற்காக சாலையோரங்களில் பள்ளம் தோண்டப்பட்ட போது, பல லட்சம் ரூபாய் செலவில் பதிக்கப்பட்ட குடிநீர் குழாய்கள் சேதமடைந்தன.
இதில், 148 மற்றும் 145வது வார்டில், மாதா கோவில் தெருவில் கட்டப்பட்டு வரும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி பணிகள் நிறைவடைந்துள்ளன.
இந்த மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளில் குடிநீர் ஏற்றி சோதனை செய்யும் பணியில், குடிநீர் வாரிய அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
இதே வார்டுகளில், பாதாள சாக்கடை அமைக்கும் பணிகளும் நடந்து வருகின்றன.
இந்நிலையில், 148 மற்றும் 145வது வார்டில், 200க்கும் மேற்பட்ட சாலைகளில் தார்ச்சாலை அமைக்க மாநகராட்சி சார்பில், தேர்தலுக்கு முன் ஒப்பந்தம் விடப்பட்டது.
ஆனால், குடிநீர் மற்றும் பாதாள சாக்கடை பணிகள் முழுமை பெறாததால், தார்ச்சாலை அமைக்க முடியாத நிலை ஏற்பட்டது.
மேலும், வீட்டு இணைப்பிற்காக போடப்பட்ட குழாய்கள், 2015ல் போடப்பட்ட மழைநீர் வடிகால் பணியால் சேதமடைந்துள்ளன.
இதனால், அந்த குழாய்களையும் மாற்றி அமைக்க வேண்டும். அத்துடன், இரு வார்டுகளில் குடிநீர் மற்றும் பாதாள சாக்கடை திட்டத்திற்கு வீட்டு இணைப்பு வழங்க, தெருவில் உள்ள வீடுகள் வரை குழாய் அமைக்க வேண்டும்.
இதற்கு, குடிநீர் வாரியம் மற்றும் மாநகராட்சி இணைந்து செயல்பட்டு, அனைத்து பணிகளையும் முடித்த பின், சாலை அமைக்க வேண்டும் என, பகுதிமக்கள் கூறி வருகின்றனர்.
இல்லையெனில், சாலை அமைத்து மூன்று மாதங்களில், குடிநீர் வாரியம் சார்பில் சாலையை தோண்ட வேண்டிய நிலை ஏற்படும்.
அத்துடன், அப்போது சாலை வெட்டு கட்டணத்தையும், குடிநீர் வாரியம் செலுத்த வேண்டியிருக்கும்.
எனவே, தற்போது தார்ச்சாலை அமைக்க உள்ள சாலைகளுக்கு முக்கியத்துவம் அளித்து, அங்குள்ள குடிநீர் குழாய் பதிக்கும் பணி மற்றும் பாதாள சாக்கடை பணிகளை விரைந்து முடித்தால், மக்கள் வரிப்பணம் வீணாவதை தடுக்கலாம்.
அதன் பின் அங்கு தார்ச்சாலை அமைக்கலாம்.

