/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மடிப்பாக்கத்தில் வீணாகும் மழைநீர் மதகு அமைக்க வேண்டுகோள்
/
மடிப்பாக்கத்தில் வீணாகும் மழைநீர் மதகு அமைக்க வேண்டுகோள்
மடிப்பாக்கத்தில் வீணாகும் மழைநீர் மதகு அமைக்க வேண்டுகோள்
மடிப்பாக்கத்தில் வீணாகும் மழைநீர் மதகு அமைக்க வேண்டுகோள்
ADDED : ஆக 01, 2024 12:49 AM

மடிப்பாக்கம், மடிப்பாக்கம், அய்யப்பநகர் ஏரியிலிருந்து, கீழ்க்கட்டளை நோக்கிச் செல்லும் மழைநீர் வடிகால் பாதையின் குறுக்கே, மதகு அமைக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இது குறித்து பகுதிவாசிகள் கூறியதாவது:
மடிப்பாக்கம் -- மேடவாக்கம் பிரதான சாலை, கோகுலம் காலனி, பாரத் நகர், மூவரசம்பேட்டை உள்ளிட்ட இடங்களிலிருந்து வரக்கூடிய மழைநீர், ஆந்திரா வங்கி அருகே உள்ள வடிகால்வாய் வழியாக, மடிப்பாக்கம் ஏரியை சென்றடைகிறது.
பின், ஏரி முழு கொள்ளளவை எட்டிய பின், உபரி நீரானது, மறுபக்கம் உள்ள கால்வாய் வழியாக கீழ்க்கட்டளை வடிகாலை சென்றடைகிறது. அதாவது, இந்த ஒரே கால்வாயில் உள்ள இரு பாதைகள் நீர் வரத்து பாதையாகவும், போக்கு கால்வாயாகவும் செயல்படுகிறது.
எனவே, மழை பெய்யும் போது, கீழ்க்கட்டளை நோக்கி செல்லும் வடிகால் பாதையை அடைத்தால் மட்டுமே, ஏரியில் நீர் நிரம்பும். தற்போது, கீழ்க்கட்டளை நோக்கி செல்லும் வடிகால் பாதை திறந்திருப்பதால், ஏரியை நோக்கி மழைநீர் செல்லாமல், போக்கு கால்வாய் வழியாக சென்று மழைநீர் வீணாகி விடுகிறது.
எனவே, இந்த இடத்தில் உள்ள போக்கு கால்வாயின் குறுக்கே 3 அடி உயரத்திற்கு மதகு அமைக்க வேண்டும். இப்படி, மதகு அமைப்பதால், ஏரியில் நீர் நிறைந்த பிறகே, கீழ்க்கட்டளை வடிகாலுக்கு நீர் செல்லும்.
எனவே, சம்பந்தப்பட்ட துறையினர் இதற்கான நடவடிக்கை எடுத்து, மழைநீர் வீணாகாமல், ஏரி முழு கொள்ளளவை எட்டுவற்கு வழி செய்ய வேண்டும்.'
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து, நீர்நிலை புனரமைப்பு சங்க நிர்வாகி சீனி சேதுராமன் என்பவர் கூறியதாவது:
கீழ்க்கட்டளை நோக்கி செல்லும் போக்கு கால்வாய் குறுக்கே, மூன்றடி உயர மதகு அமைக்க, பொதுப்பணித் துறை அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை வைத்தும், எவ்வித நடவடிக்கையும் இல்லை. மதகு அமைக்க, சில அமைப்புகளும் முன்வருகின்றன. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனித்து, மதகு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.