/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
'அமோனியா' கப்பலை தடுத்து நிறுத்த தீர்மானம்
/
'அமோனியா' கப்பலை தடுத்து நிறுத்த தீர்மானம்
ADDED : ஆக 19, 2024 02:04 AM
திருவொற்றியூர், :எண்ணுார், பெரியகுப்பம் பகுதியில் செயல்படும், கோரமண்டல் உரத்தொழிற்சாலைக்கு கடலின் நடுவில் கப்பலில் இருந்து குழாய் வழியாக, அமோனியா வாயு, திரவ நிலையில் இறக்குமதி செய்யப்படும்.
கடந்தாண்டு, டிச., 26ம் தேதி நள்ளிரவு, அமோனியா வாயு குழாய் குளிர்வித்தல் மற்றும் பராமரிப்பு பணியின் போது, ஏற்கனவே 'மிக்ஜாம்' புயலின் போது, சேதமடைந்திருந்த குழாய் வழியாக அமோனியா வாயு கசிந்தது.
இதன் காரணமாக, பெரியகுப்பம், சின்னகுப்பம் உட்பட 33 கிராமங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. மக்கள் உயிர்பலி அபாயத்தில், நள்ளிரவில் வீடுகளை விட்டு வெளியேறிய சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பின், குழாய் சேதம் சரிசெய்யப்பட்டதை தொடர்ந்து, வீடுகளுக்கு திரும்பிய மக்கள், ஆலையை மூட கோரி, 82 நாட்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர். இதையடுத்து, மாசு கட்டுபாட்டு வாரியம், ஆலைக்கு தற்காலிக தடை விதித்தது.
லோக்சபா தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக, போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில், ஆலை திறக்கப்பட்டதாக, நேற்று முன்தினம் செய்திகள் வெளியாயின.
தொடர்ந்து, திருவொற்றியூர் குப்பம், திருச்சிணாங்குப்பம், ஒண்டிக்குப்பம் என, 11 மீனவ கிராமங்களை உள்ளடக்கிய, திருவொற்றியூர் மீனவர் கிராம நல சபை சார்பில், நேற்று காலை அவசர ஆலோசனை கூட்டம் நடந்தது.
முன்னாள் அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., குப்பன் தலைமையில் நடந்த கூட்டத்தில், 'நடுக்கடலில் அமோனியா வாயு இறக்குமதி செய்யும் கப்பலை, 300க்கும் மேற்பட்ட படகுகளில் சென்று முற்றுகையிட்டு தடுத்து நிறுத்துவோம்.
தொழிற்சாலை நுழைவு வாயிலை முற்றுகையிட்டு, தொடர் போராட்டம் நடத்தப்படும். கோரமண்டல் தொழிற்சாலையால், திருவொற்றியூர் தொகுதி பாதிக்காதபடி நிரந்தரமாக மூட வேண்டும்' என்பது உள்ளிட்ட ஆறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

