/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ரூ. 58.33 கோடியில் கடப்பாக்கம் ஏரி புனரமைப்பு புத்துயிர்! சுற்றுலா தலமாக மாற்ற விவசாயிகள் கடும் எதிர்ப்பு
/
ரூ. 58.33 கோடியில் கடப்பாக்கம் ஏரி புனரமைப்பு புத்துயிர்! சுற்றுலா தலமாக மாற்ற விவசாயிகள் கடும் எதிர்ப்பு
ரூ. 58.33 கோடியில் கடப்பாக்கம் ஏரி புனரமைப்பு புத்துயிர்! சுற்றுலா தலமாக மாற்ற விவசாயிகள் கடும் எதிர்ப்பு
ரூ. 58.33 கோடியில் கடப்பாக்கம் ஏரி புனரமைப்பு புத்துயிர்! சுற்றுலா தலமாக மாற்ற விவசாயிகள் கடும் எதிர்ப்பு
ADDED : ஆக 13, 2024 11:28 PM

மணலி, ஆசிய வளர்ச்சி வங்கியின் 58.33 கோடி ரூபாய் நிதியுதவியுடன் மணலி - கடப்பாக்கம் ஏரி புனரமைப்பு பணிகள் துவங்கியுள்ளன. இந்த ஏரியை சுற்றுலா தலமாக மாற்ற எதிர்ப்பு தெரிவித்துள்ள விவசாயிகள், முழுமையாக விவசாயத்திற்கே பயன்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும் என, வலியுறுத்தி உள்ளனர்.
சென்னை மாநகராட்சி, மணலி மண்டலம், 16 வது வார்டில், கடப்பாக்கம் ஏரி உள்ளது. வடக்கே, விச்சூர் பிரதான சாலை, மேற்கே, விவசாய நிலங்கள், கிழக்கே, கண்ணியம்மன்பேட்டை கிராமம் மற்றும் விவசாய நிலங்கள், தெற்கே அரியலுார் ஏரி என, நான்கு எல்லைகளுடன், 149 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.
விச்சூர் அருகேயுள்ள, செம்பியம் மணலி ஏரி நிரம்பும் பட்சத்தில், உபரிநீர் கால்வாய் வழியாக, 2.1 கி.மீ., துாரம் பயணித்து, கடப்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து இருக்கும். தவிர, சுற்றுவட்டார பகுதியின் மழைநீரும், நீர்வரத்து ஆதாரமாக உள்ளது.
விவசாய நிலம்
கடப்பாக்கம் ஏரி நிரம்பும் பட்சத்தில், ஏரிக்கே வடக்கேயுள்ள, ராஜாங்கால் ஓடை வழியாக, 4.3 கி.மீ., துாரம் பயணித்து, புழல் உபரி கால்வாயை சென்றடையும். தெற்கு புறம் உள்ள கலங்கல் வழியாக, உபரி நீர் அரியலுார் ஏரிக்கு சென்றடையும் வகையில் அமைப்பு உள்ளது.
இந்த ஏரியை நம்பி, 300 ஏக்கருக்கும் அதிகமான விவசாய நிலங்கள் உள்ளன. சுற்றுவட்டார விவசாயிகள், இந்த நிலங்களில், நெல், வாழை, கீரை உள்ளிட்ட பயிர்களை விவசாயம் செய்து வருகின்றனர்.
இதற்காக, ஏரியின் கிழக்கு பக்க கரையில், நான்கு இடங்களில், மின்மோட்டார் வழியாக ஏரி நீரை இறைக்கப்பட்டு, கால்வாய் வழியாக விவசாய நிலங்களுக்கு செல்கிறது. இதனால், நிலத்தடி நீர்மட்டமும் உயர்கிறது. இதேபோல, மேற்கு பக்கமும் மின்மோட்டார் வழியாக ஏரி நீர் இறைக்கப்பட்டு, விவசாயத்திற்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.
கிராமங்களில் கால்நடைகள் வளர்ப்போருக்கும் கடப்பாக்கம் ஏரியை சுற்றியே வாழ்வாதாரம் அமைந்துள்ளது. இதனால், இந்த ஏரியை புனரமைக்க பல்வேறு தரப்பில் கோரிக்கைகள் வைக்கப்பட்டன. இதை ஏற்று, ஏரி புனரமைப்பு திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு முன்வந்தது. ஆனால், பல முறை திட்டமிட்டும், பணிகள் துவக்கப்படவில்லை.
ஒற்றை கோரிக்கை
இதற்கிடையே, ஏரியை விவசாயத்திற்கு பயன்படுத்தும் அதே நேரத்தில், சுற்றுலா தலமாக மாற்றுவதற்கு மாற்று யோசனையும் முன் வைக்கப்பட்டது. இதன்படி, ஏரியில் படகு குழாம் உள்பட, சுற்றுலா பயணியரை ஈரக்கும் வகையில் பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்கள் உருவாக்கவும் திட்டமிடப்பட்டது. ஆனல், இதற்கு விவசாயிகள் தரப்பில் கடும் எதிர்ப்பு எழுந்தது.
இதையடுத்து, விவசாயிகளிடம் கருத்துக்கேட்பு கூட்டம் நடத்தப்பட்டது. அதில் பெரும்பாலானோர் கருத்தை ஏற்று, சுற்றுலா தலமாக மாற்றும் திட்டம் கைவிடப்பட்டது. இதைத் தொடர்ந்து, ஏரியை புனரமைக்கும் திட்டமதிப்பீடு செலவு கணக்கிடப்பட்டது.
இந்நிலையில், ஆசிய வளர்ச்சி வங்கியின், உலகளாவிய சுற்றுசூழல் வசதி மானிய நிதியான 58.33 கோடி ரூபாய் செலவில், கடப்பாக்கம் ஏரியினை புனரமைக்கும் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
நீண்ட முயற்சிகளுக்கு பின், நேற்று முன்தினம் இத்திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார். ஆனாலும், ஏரியை வேறு திட்டத்திற்கு பயன்படுத்தும் வாய்ப்பு உள்ளதாக கருதிய விவசாயிகளின் ஒரு பிரிவினர், இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
'ஏரியை விவசாயத்திற்கு பயன்படுத்த முடியாமல் போகும் நிலையில், விவசாய நிலங்களும் பயனற்று போகும். இந்த நிலங்களை பயன்படுத்தி வேறு திட்டங்கள் உருவாக்கும் முயற்சி நடக்கும்' என, அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் கூறியதாவது:
கடப்பாக்கம் ஏரி புனரமைப்பு பணிகள் ஒரு புறம் இருந்தாலும், கடைசி விவசாய நிலம் இருக்கும் வரை, ஏரியில் கடைசி சொட்டு நீர் இருக்கும் வரை, சுற்றியுள்ள விவசாய நிலங்களுக்கு பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என்பதே எங்களின் ஒற்றை கோரிக்கை. இதையே, கருத்துக்கேட்பு கூட்டங்களிலும் தொடர்ந்து வலியுறுத்தினோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
அடிக்கல் நாட்டு விழாவின் போது, இதற்கு எதிர்ப்பு தெரிவிக்க வந்த விவசாயிகளிடம் போலீசார் பேச்சு நடத்தினர். அவர்களிடம் திட்டம் குறித்து விளக்கியதை அடுத்து, கலைந்து சென்றனர். தற்போது ஏரியின் ஆழம் சராசரியாக, 10 - 12 அடியாக உள்ளது. இதில், 1.1 மில்லியன் கன மீட்டர் அளவிற்கு தண்ணீர் தேக்கலாம்.
புனரமைப்பு திட்டத்தின் கீழ், ஏரியை ஆழப்படுத்தி, அகலப்படுத்துவதுடன், கரைகளை பலப்படுத்தும் பணியும் மேற்கொள்ளப்பட உள்ளது. புனரமைப்பு பணிக்கு பின், 2.2 மில்லியன் கன மீட்டர் அளவிற்கு தண்ணீர் தேக்க முடியும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.
நிம்மதி இழக்க நேரிடும்
கடப்பாக்கம் ஏரியை நம்பி, சுற்றுவட்டாரத்தில் பல கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் உள்ளனர். ஏரியை சுற்றுலா தலமாக மாற்றினால், விவசாய நிலங்களுக்கான பாசன வசதி தடைபட வாய்ப்புள்ளது. சுற்றுலாவுக்காக மற்ற பகுதிகளில் இருந்து ஏராளமானோர் வரும் நிலை உருவானால், குற்றச்சம்பவங்களும் அதிகம் அரங்கேறும். சுற்றுவட்டார கிராம மக்கள் நிம்மதியிழந்து தவிக்க நேரிடும்.
- டி. ராஜா, 43,
கண்ணியம்மன்பேட்டை கிராமம், மணலி.
அச்சம் வேண்டாம்
விவசாயிகளின் கருத்து கேட்புக்கு பின், ஏரி புனரமைப்பு திட்டத்தில் இருந்த படகு குழாம் போன்ற பல திட்டங்கள் திரும்ப பெறப்பட்டுள்ளன. இத்திட்டத்தில், பல்லுயிர் பெருக்கத்திற்கான அனைத்து சிறப்பம்சங்களும் இடம்பெற உள்ளது. ஏரிக்கரையோர பகுதிகளில் நடைபாதை, சிறுவர் பூங்கா, விளையாட்டு திடல் உள்ளிட்டவை உருவாக்கப்படும். மரங்கள் நடுதல், மதகுகளை சீரமைத்தல் போன்ற பணிகளால், மழைக்காலத்தின் போது வெள்ளபாதிப்பின் வீரியம் குறையும்.
இந்த திட்டத்தின் நோக்கமே ஏரியில் அதிகளவில் நீரை தேக்கி, நிலத்தடி நீர் மட்டத்தை அதிகரிப்பது தான். அத்துடன், ஏரியை முறையாக துார்வாரி, ஆழப்படுத்தி, கரைகளை பலப்படுத்துவதன் வாயிலாக இரு மடங்கு தண்ணீரை சேமிக்க முடியும். சுற்றுவட்டார விவசாயிகளுக்கான சீரான நீர்ப்பாசன வசதி செய்து தரமுடியும். விவசாயிகள் அச்சப்படத் தேவையில்லை.
- மணலி மண்டல அதிகாரி