/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஆபத்தான குடியிருப்புகளால் விபத்து அபாயம்
/
ஆபத்தான குடியிருப்புகளால் விபத்து அபாயம்
ADDED : ஜூலை 12, 2024 12:50 AM

அயனாவரம், பழைய வாரிய குடியிருப்பின் கட்டடத்தின், 'சீலிங்' பகுதியிலிருந்து சிமென்ட் பூச்சு பெயர்ந்து விழுவதால், குடியிருப்புவாசிகள் அச்சத்தில் உள்ளனர்.
சென்னை, அண்ணா நகர் மண்டலம், 97வது வார்டில் அயனாவரம், பச்சைக்கல் வீராசாமி தெருவில், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால், 50 ஆண்டுகளுக்கு முன் குடியிருப்புகள் கட்டப்பட்டன.
இதில் மொத்தம் எட்டு, 'பிளாக்'குகளில், 500க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. பல ஆண்டுகள் பழைய கட்டடம் என்பதால், தற்போது வீடுகளின் உறுதித் தன்மையை இழந்துள்ளது. குறிப்பாக, மேல் தளங்களில் உள்ள வீடுகளின் கூரையில் இருந்து, சிமென்ட் பூச்சு பெயர்ந்து விழுகிறது.
நேற்று முன்தினம் மாலை, சில வீடுகளின் கூரையில் இருந்து சிமென்ட் பூச்சு பெயர்ந்து விழுந்ததால், குடியிருப்புவாசிகள் பீதியடைந்து வெளியேறியதாக தெரிகிறது.
இதுகுறித்து குடியிருப்பு மக்கள் கூறுகையில், 'பல இடங்களில், பழைய அரசு கட்டடங்கள் இடித்து, புதிய குடியிருப்புகள் கட்டப்படுகின்றன. அதேபோல், பருவமழைக்கு முன், ஆபத்தான நிலையில் இருக்கும் பச்சைக்கல் வீராசாமி தெருவில் உள்ள வீடுகளை, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, பெரும் விபத்து ஏற்படும் முன் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.

