/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
நீர்வழித்தடங்கள் துார்வாராததால் டெங்கு அபாயம்
/
நீர்வழித்தடங்கள் துார்வாராததால் டெங்கு அபாயம்
ADDED : செப் 02, 2024 01:49 AM
சென்னை:தமிழக அரசு 20 கோடி ரூபாய் ஒதுக்கியும், நீர்வழித்தடங்கள் முறையாக துார் வாரப்படாததால், டெங்கு பரவல் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்கள், வடகிழக்கு பருவமழையால் அதிகம் பாதிக்கப்படுகின்றன.
இம்மாவட்டங்களில் வெள்ள சேதத்தை குறைக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அடையாறு, கூவம், பகிங்ஹாம் கால்வாய், புழல் ஏரி உபரிநீர் கால்வாய், விருகம்பாக்கம் - அரும்பாக்கம் கால்வாய், ஓட்டேரி நல்லா உள்ளிட்ட நீர்வழித்தடங்கள் துார் வாரப்படுகின்றன. இப்பணிக்கு ஆண்டுதோறும், 10 கோடி ரூபாயை, அரசு வழங்கி வந்தது.
இந்த நிதி குறைவாக இருப்பதால், முறையாக துார் வார முடியவில்லை. நீரோட்டம் தடைபடுவதால், வெள்ள பாதிப்பு ஏற்படுவதாக, நீர்வளத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதை பரிசீலித்த நிதித்துறை, நடப்பாண்டு 20 கோடி ரூபாயை வழங்கி உள்ளது.
இந்த நிதியில், பல்வேறு இடங்களில் துார் வாரும் பணிகள் நடைபெற்று வருகின்றன. துார் வாரும் பணிகளை, டிசம்பர் மாதம் வடகிழக்கு பருவமழை வரை தொடர வேண்டும்.
நீர்வழித்தடங்களில் உள்ள ஆகாய தாமரை, புதர்கள், முள் செடிகள் உள்ளிட்டவற்றை அகற்றி, அப்புறப்படுத்த வேண்டும்.
இதற்கு கூடுதல் நிதி செலவாகும் என்பதால், ஒப்பந்தம் எடுத்த நிறுவனங்கள், பணியை தாமதப்படுத்தி வருகின்றன. அத்துடன், மழை துவங்கினால், நீரோட்டத்தில் ஆகாய தாமரை, புதர்கள் அடித்துச் செல்லும் என்ற நம்பிக்கையில் உள்ளனர்.
புதர்கள் மற்றும் ஆகாய தாமரைகளுக்கு இடையே, கொசுக்கள் உற்பத்தி அதிகரித்து உள்ளது.
இதனால் டெங்கு, சிக்குன் குனியா உள்ளிட்டவை பரவும் அபாயம் உள்ளது. ஏற்கனவே டெங்கு பரவல் காரணமாக, பலரும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
இதே நிலை தொடர்ந்தால், சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில், டெங்கு பரவல் வேகம் எடுக்கும் வாய்ப்புள்ளது.
இதை, நீர்வளத்துறை செயலர் மணிவாசன், சென்னை மண்டல தலைமை பொறியாளர் ஜானகி, பாலாறு வடிநில கோட்ட கண்காணிப்பு பொறியாளர் திலகம் உள்ளிட்டோர் கண்டும், காணாமல் உள்ளனர்.
எனவே, தலைமை செயலர் முருகானந்தம், துறைக்கு பொறுப்பு வகிக்கும் முதல்வரின் செயலர் உமாநாத் ஆகியோர் ஆய்வு செய்து, துார் வாரும் பணிகளை வேகப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் எழுந்துள்ளது.