ஜி.என்.டி., சாலை விரிவாக்க பணி மீண்டும் கிடப்பில் போன அவலம்
ஜி.என்.டி., சாலை விரிவாக்க பணி மீண்டும் கிடப்பில் போன அவலம்
ADDED : செப் 29, 2026 08:45 PM
சென்னை: ஜி.என்.டி., சாலையில் பழைய மின்கம்பங்கள் மாற்றும் பணி கிடப்பில் போடப்பட்டுள்ளதால், சாலை விரிவாக்க பணியும் தாமதமாகியுள்ளது.
சென்னை –- கொல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில், மாதவரம் – நல்லுார் சுங்கச்சாவடி வரை, 10.3 கி.மீ., மேற்கொள்ளப்பட வேண்டிய சாலை விரிவாக்கம் மற்றும் மேம்பால பணிகள் பல ஆண்டுகள் தாமதத்திற்கு பின் தொடங்கியது.
புழல் சிறை அருகே, ஜி.என்.டி., சாலையில் விரிவாக்க பணிகள் 60 சதவீதம் முடிந்துள்ள நிலையில், சாலையோரம் மின்கம்பங்களை மாற்றும் பணி தொடங்கியது. இப்பணி முடிந்தால் தான், சாலை விரிவாக்க பணி நிறைவுபெறும்.
இந்நிலையில், இங்குள்ள டிரான்ஸ்பார்மர்களை, புழல் சிறை வளாகம் அருகே மாற்றும் பணியில் நேற்று மின்வாரியத்தினர் ஈடுபட்டனர். இப்பணிகளும் பாதி முடிந்த நிலையில், நேற்று திடீரென புழல் சிறை அதிகாரிகள், ‘சிறை அருகே டிரான்ஸ்பார்மர்களை வைக்க வேண்டாம். இதன் மீது ஏறி யாராவது தற்கொலை செய்ய முயற்சிக்கலாம்’ எனக் கூறியதால், பணிகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டன.
இதனால், ஜி.என்.டி., சாலையில் உள்ள பழைய மின்கம்பங்களை மாற்றும் பணி தற்காலிகமாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. இப்பணிகள் முடிந்தால் தான், சாலை விரிவாக்க பணிகள் மீண்டும் தொடங்கும்.
