/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கடலில் விழுந்த ராக்கெட்: மீட்பு பணி தாமதம்
/
கடலில் விழுந்த ராக்கெட்: மீட்பு பணி தாமதம்
ADDED : ஆக 26, 2024 01:45 AM
மாமல்லபுரம்:விண்ணில் செலுத்தி, கடலில் இறங்கிய 'மிஷன் ரூமி - 2024' ராக்கெட்டை, கடலின் இயல்பு தன்மை மாற்றம் காரணமாக, மீட்பது தாமதமாகிறது.
சென்னை கேளம்பாக்கத்தைச் சேர்ந்த 'ஸ்பேஸ் சோன் இந்தியா' நிறுவனம், 'மிஷன் ரூமி - 2024' என்ற, மீண்டும் பயன்படுத்தும் வகையிலான ராக்கெட்டை, நாட்டில் முதல் முறையாக உருவாக்கியது.
இவ்வகை ஒரே ராக்கெட்டில், பலமுறை செயற்கைக்கோள்களை ஏவலாம். இதன் வாயிலாக, 'க்யூப்' எனப்படும் சோதனை முறை செயற்கைக்கோள்கள் மூன்றும், 'பிகோ' எனப்படும் 50 சிறிய செயற்கைக்கோள்களும், நேற்று முன்தினம், மாமல்லபுரம் அடுத்த திருவிடந்தை கடற்கரையிலிருந்து ஏவப்பட்டு, வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தன.
35 கி.மீ., தொலைவை அடைந்து, செயற்கைக்கோள்கள் விண்ணில் நிலை நிறுத்தப்பட்டன.
ஏவுதளத்திலிருந்து புறப்பட்ட 589 விநாடிகளில், 'பாராசூட்' வாயிலாக, கரையிலிருந்து 1.8 கி.மீ., தொலைவிற்குள் ராக்கெட் கடலில் விழுந்தது.
அப்போதே கடலிலிருந்து அந்த ராக்கெட் மீட்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கடலின் இயற்கை தன்மை மாற்றம் காரணமாக, சில நாட்கள் தாமதமாகலாம் எனத் தெரிகிறது.
இதுகுறித்து, 'ஸ்பேஸ் சோன் இந்தியா' நிறுவன தலைமை செயல் அலுவலர் ஆனந்த் மேகலிங்கம் கூறியதாவது:
'மிஷன் ரூமி - 2024' ராக்கெட்டை உடனே மீட்க, நீர்மூழ்கி வீரர்கள் படகில் அனுப்பப்பட்டனர்.
கடலின் இயல்பு தன்மை மாற்றம் காரணமாக, கடல் நீர் அடர்ந்த பசுமையுடன் இருந்ததால், கடலுக்குள் உள்ளதை அவர்களால் பார்க்க முடியவில்லை.
டைட்டானியம் உலோகத்தால் செய்யப்பட்ட ராக்கெட், பாதுகாப்பாக விழுந்துள்ளது. 50 ஆடி ஆழத்தில் இருக்கலாம். அதன் எடை குறைவு காரணமாக, அலையில் நகர வாய்ப்புள்ளது.
கடல்நீர் தெளிந்தால், நாங்களே கண்டறிந்து மீட்டு விடுவோம். விண்ணில் நிலைநிறுத்தப்பட்ட செயற்கைக்கோள்கள் வாயிலாக கிடைத்துள்ள தரவுகளை, முழுமையாக அறிந்து அறிவிப்போம்.
இவ்வாறு, அவர் கூறினார்.

