ADDED : ஜூன் 06, 2026 08:23 PM
கொளத்துார்: சாலையில் விளையாடிய சிறுவர்களிடம் அசிங்கமாக பேசியதை கண்டித்த பேருந்து ஓட்டுநரை, வீடு புகுந்து தாக்கிய ரவுடியை போலீசார் கைது செய்தனர்.
வில்லிவாக்கம் வடக்கு ஜகன்னாதன் நகரைச் சேர்ந்த ரமேஷ், 57. அயனாவரம் மாநகர பேருந்து பணிமனையில் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார்.
நேற்று முன்தினம் இரவு, அவரது வீட்டின் முன் சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது, அதே பகுதியில் வசிக்கும் ரவுடி அருண்பிரபு, 36, என்பவரது மகன்கள் இருவர், அந்த சிறுவர்களிடம் அருவருக்கத்தக்க வகையில் பேசியுள்ளனர். இதை, ரமேஷ் கண்டித்துள்ளார்.
இதையடுத்து மகன்கள், தங்கள் தந்தையான ரவுடி அருண்பிரபுவிடம் கூறியுள்ளனர். அருண்பிரபு, கூட்டாளிகள் இருவருடன், ரமேஷின் வீட்டுக்குள் புகுந்து, அவரை தாக்கினர். தடுக்க முயன்ற அவரது மனைவி சுஜாதாவையும் அடித்தனர். காயமடைந்த ரமேஷ், பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின்படி போலீசார் வழக்குப்பதிந்து அருண்பிரபுவை கைது செய்தனர்.
