/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ரூ.50 லட்சம் மோசடி தி.மு.க., கவுன்சிலர் மீது புகார்
/
ரூ.50 லட்சம் மோசடி தி.மு.க., கவுன்சிலர் மீது புகார்
ரூ.50 லட்சம் மோசடி தி.மு.க., கவுன்சிலர் மீது புகார்
ரூ.50 லட்சம் மோசடி தி.மு.க., கவுன்சிலர் மீது புகார்
ADDED : மே 08, 2024 12:18 AM
தாம்பரம், அரசு வேலை வாங்கி தருவதாக கூறி, 50 லட்சம் ரூபாய் வரை மோசடியில் ஈடுபட்டதாக, சென்னை மாநகராட்சி, தி.மு.க., கவுன்சிலர் மீது, தாம்பரம் காவல் ஆணையரகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
துரைப்பாக்கம், முட்டைக்காரன் சாவடியைச் சேர்ந்தவர் கவுசல்யா, 40. சோழிங்கநல்லுாரில் தற்காலிக துாய்மை பணியாளராக பணிபுரிந்து வரும் இவர், தாம்பரம் போலீஸ் கமிஷனரகத்தில், நேற்று ஒரு புகார் அளித்தார்.
அதில், சென்னை மாநகராட்சி, 199வது வார்டு, தி.மு.க., கவுன்சிலர் சங்கர் என்பவர், கவுசல்யாவிற்கு ஊனமுற்றோர் உதவித்தொகைக்கு உதவி செய்துள்ளார். அப்போது, பொதுப்பணித் துறையில், பட்டியலினத்தவருக்கு நிரந்தர அரசு வேலை வாங்கி தருவதாக கூறி, முதலில், 2 லட்சம் ரூபாயை, கவுன்சிலர் சங்கர் வாங்கியதாக கூறப்படுகிறது.
தொடர்ந்து, அவர் கூறியதை நம்பி, 2022 முதல் 2024 வரை, 23 பேரிடம் இருந்து, 50 லட்சம் ரூபாய் வரை பணம் வசூல் செய்து, கவுன்சிலர் சங்கரிடம், கவுசல்யா வழங்கியதாக தெரிகிறது.
ஆனால், கூறியபடி வேலை வாங்கி தராததால், நான்கு பேர், 'தங்களுக்கு வேலை வேண்டாம்' என தகராறு செய்ததால், அவர்களுக்கு பணத்தை திருப்பி கொடுத்ததாக கூறப்படுகிறது. மற்றவர்களுக்கு வேலை வாங்கி தருவதாக ஏமாற்றி விட்டதாகவும், பணம் கொடுத்தவர்கள் கவுசல்யாவை தொந்தரவு செய்ததால், கொடுத்த பணத்தை திருப்பி வழங்கும்படி, கவுன்சிலர் சங்கரிடம் கவுசல்சயா கேட்டுள்ளார்.
முதலில் பணத்தை திருப்பி தருவதாக கூறிய சங்கர், பின்னர் பணத்தை தர முடியாது, உன்னால் முடிந்ததை பார்த்துக்கொள் என மிரட்டுவதாக புகாரில் குறிப்பிட்டிருந்தார்.

