/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வீடு தாமதமானதால் ரூ.5 லட்சம் இழப்பீடு
/
வீடு தாமதமானதால் ரூ.5 லட்சம் இழப்பீடு
ADDED : ஜூலை 16, 2024 12:24 AM
சென்னை, ஒப்பந்தப்படி குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் வீட்டை ஒப்படைக்காமல் தாமதித்த கட்டுமான நிறுவனம், 5 லட்சம் ரூபாய் இழப்பீடு அளிக்க ரியல் எஸ்டேட் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
கோயம்பேடு அருகில், ஓசோன் என்ற நிறுவனம் சார்பில் அடுக்குமாடி குடியிருப்பு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதில் வீடு வாங்க, வி.ஜி.ராமகிருஷ்ணன், பார்வதி ராமகிருஷ்ணன் ஆகியோர், 2012ல் ஒப்பந்தம் செய்தனர்.
இதன்படி, அவர்கள் 1.68 கோடி ரூபாய் செலுத்தினர். இதற்கான ஒப்பந்தத்தில், 2013 அக்டோபரில் வீட்டை ஒப்படைப்பதாக கட்டுமான நிறுவனம் உறுதி அளித்திருந்தது.
ஆனால், அந்த நிறுவனம் குறிப்பிட்ட காலத்தில் பணிகளை முடிக்காமல், மிக தாமதமாக 2019ல் வீட்டை ஒப்படைத்துள்ளது. இது குறித்து பணம் செலுத்திய ராமகிருஷ்ணன், ரியல் எஸ்டேட் ஆணையத்தில் முறையிட்டார்.
இந்த மனு தொடர்பாக, ரியல் எஸ்டேட் ஆணைய விசாரணை அலுவலர் என்.உமா மகேஸ்வரி பிறப்பித்த உத்தரவு:
ஒப்பந்தத்தில் குறிப்பிட்ட காலத்தில் கட்டுமான நிறுவனம் வீட்டை ஒப்படைக்கவில்லை என்பது உறுதியாகிறது. தாமதத்தால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு இழப்பீடு பெற மனுதாரர் தகுதி பெறுகிறார்.
எனவே, கட்டுமான பணிகளை தாமதித்த நிறுவனம், பாதிக்கப்பட்ட மனுதாரருக்கு 5 லட்சம் ரூபாய் இழப்பீடும், 50,000 ரூபாய் வழக்கு செலவும் வழங்க வேண்டும்.
இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதில் இருந்து, 90 நாட்களுக்குள் இழப்பீட்டை கட்டுமான நிறுவனம் வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

