ADDED : ஜூலை 04, 2024 12:35 AM

சென்னை, சென்னை மாநகராட்சியில், மொத்தமுள்ள 15 மண்டலங்களில், 10 மண்டலங்களில் குப்பை கையாளும் பணியை, தனியார் நிறுவனங்கள் மேற்கொண்டு வருகின்றன. மேலும், அம்பத்துார் மண்டலத்தில் சில பகுதிகளையும் தனியார் நிறுவன பணியாளர்கள் துாய்மை பணியில் ஈடுபடுகின்றனர்.
இதற்கிடையே, ராயபுரம், திரு.வி.க.நகர் மண்டலங்களில் குப்பை கையாளும் பணியை தனியாரிடம் விட மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, உழைப்போர் உரிமை இயக்கம் மற்றும் இடது தொழிற்சங்க மையம் சார்பில் துாய்மை பணியாளர்கள், மாநகராட்சி ரிப்பன் மாளிகையை முற்றுகையிட்டனர்.
இதனால், பூந்தமல்லி நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சிலர், மாநகராட்சி கமிஷனரிடம் மனு அளித்தனர். தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.
துாய்மை பணியாளர்கள் கூறுகையில், 'குப்பை கையாளும் பணியை தனியாரிடம் விடுவதை அரசு கைவிட வேண்டும். தேர்தல் வாக்குறுதியில் அளித்தபடி, துாய்மை பணியாளர்களை நிரந்தர பணியாளர்களாக நியமிக்க வேண்டும்' என்றனர்.