/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ரூ.40 லட்சம் செலவில் சிக்னல்களில் நிழற்பந்தல்
/
ரூ.40 லட்சம் செலவில் சிக்னல்களில் நிழற்பந்தல்
ADDED : மே 09, 2024 12:15 AM

சென்னை, சென்னையில் கோடை வெயிலில் இருந்து வாகன ஓட்டிகளுக்கு தற்காலிக தீர்வு ஏற்படுத்தும் வகையில், 40 லட்சம் ரூபாய் மதிப்பில் 'பசுமை நிழற்பந்தல்' அமைக்கப்பட்டு வருகிறது.
கோடைவெயிலில், சாலை சிக்னல்களில் பச்சை விளக்குக்காக காத்திருக்கும் வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக, பைக், ஸ்கூட்டர், சைக்கிள் மற்றும் பாதசாரிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். மயக்கம், உடல்சோர்வு, நீர்ச்சத்து குறைதல் போன்ற உடல்நல பாதிப்புகளை சந்திக்க நேரிடுகிறது.
எனவே, சென்னை மாநகராட்சி பகுதியில், 'பசுமை நிழற்பந்தல்' அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்கான பாதுகாப்பு அம்சங்கள் குறித்து, மாநகராட்சி பொறியாளர்கள், போலீசாருடன் இணைந்து ஆய்வு நடத்தினர்.
இதில் முதற்கட்டமாக, ராஜா முத்தையா சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை சந்திப்பு, அண்ணா நகர் இரண்டாவது அவென்யூ, திருமங்கலம் ரவுண்டானா சிக்னல், நியூ ஆவடி சாலை, கீழ்ப்பாக்கம் மூன்றாவது அவென்யு சந்திப்பு, வள்ளுவர் கோட்டம் நெடுஞ்சாலை, கீழ்ப்பாக்கம் - சேத்துப்பட்டு ஆகிய சிக்னல்களில் நிழற்பந்தல் அமைக்கப்பட்டு வருகிறது.
அதேபோல், எல்.பி. சாலை, மேற்கு அவென்யூ சாலை சந்திப்பு, திருவான்மியூர் எல்.பி., சாலை, அடையாறு எல்.பி., சாலை, ஓ.எம்.ஆர்., எல்.பி., சாலை, உள்ளிட்ட சாலை சிக்னல்கள் அடையாளம் காணப்பட்டு, நிழற்பந்தல்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
இதுகுறித்து, மாநகராட்சி கமிஷனர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது:
சென்னையில் நிழற்பந்தல், இரும்புக் கம்பிகளுடன், மிகவும் பாதுகாப்பு அம்சங்களுடன் அமைக்கப்படும்.
பலத்த காற்று அடித்தாலும் அவை தாங்கக் கூடிய வகையில், நிழற்பந்தல் இருக்கும். ஒவ்வொரு நிழற்பந்தலும், 17 அடி உயரத்துக்கு மேல் அமைக்கப்பட்டு வருகிறது. இதற்காக மாநகராட்சியில், 40 லட்சம் ரூபாய்க்குமேல் நிதி செலவிட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.