/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சாலையை ஆக்கிரமித்த கடைகள் மெரினா லுாப் சாலையில் நெரிசல்
/
சாலையை ஆக்கிரமித்த கடைகள் மெரினா லுாப் சாலையில் நெரிசல்
சாலையை ஆக்கிரமித்த கடைகள் மெரினா லுாப் சாலையில் நெரிசல்
சாலையை ஆக்கிரமித்த கடைகள் மெரினா லுாப் சாலையில் நெரிசல்
ADDED : மே 08, 2024 12:11 AM
மெரினா, மெரினா லுாப் சாலையில் அதிகரித்து வரும் ஆக்கிரமிப்பு கடைகளால், போக்குவரத்து நெரிசலில் சிக்கி வாகன ஓட்டிகள் தவித்து வருகின்றனர்.
சென்னை, சாந்தோம் நெடுஞ்சாலையில் மெட்ரோ ரயில் பணி மேற்கொள்ளப்பட்டு வருவதால், ஒருவழிச்சாலையாக மாற்றப்பட்டு உள்ளது.
இதனால் காந்தி சிலையிலிருந்து அடையாறு நோக்கிச் செல்லும் அனைத்து வாகனங்களும், கலங்கரை விளக்கம் அருகே இடதுபுறம் மெரினா லுாப் சாலை வழியாக திருப்பி விடப்பட்டுள்ளன.
ஆனால், லுாப் சாலையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் ஆக்கிரமிப்பு கடைகளால், அவ்வப்போது ஏற்படும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி, வாகன ஓட்டிகள் தவித்து வருகின்றனர். எனவே, இதற்கு தீர்வு காண வேண்டுமென, கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:
மெரினா லுாப் சாலையில், நுாற்றுக்கணக்கான மீன் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இதனால், சென்னையின் பல்வேறு இடங்களிலிருந்து இப்பகுதிக்கு மக்கள் வந்து, மீன் வாங்கிச் செல்கின்றனர்.
குறிப்பாக, வார இறுதி நாட்களில் இச்சாலையில் வாகனங்கள் எறும்பு போல் ஊர்ந்து தான் செல்ல வேண்டி உள்ளது. ஒருபுறம் மீன் விற்பனைக் கடைகள் என்றால், மறுபுறம் அவற்றை வெட்டி, சுத்தம் செய்து கொடுக்கும் கடைகள் செயல்பட்டு வருகின்றன.
இங்கு மீன் வாங்க வருவோர், சாலையை ஆக்கிரமித்து தங்களது வாகனங்களை நிறுத்துவதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இதற்கு தீர்வு காணும் விதமாக, 10 கோடி ரூபாய் செலவில் மீன் அங்காடி அமைக்க, மாநகராட்சி முடிவு செய்தது.
அதன்படி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஆனால், குறிப்பிட்ட காலக்கெடு முடிந்த பிறகும், மீன் அங்காடி அமைக்கும் பணிகள் மந்தகதியில் நடைபெற்று வருகின்றன.
அவற்றை விரைந்து முடித்தால், இச்சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு கிடைக்கும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதுகுறித்து மாநகராட்சி மேற்பார்வை பொறியாளரிடம் கேட்ட போது,'மீன் அங்காடி அமைக்கும் பணி இம்மாதம் இறுதிக்குள் முடிவடைந்து விடும். ஜூன் மாதம் மீண்டும் கணக்கெடுப்பு பணி மேற்கொண்டு, கடைகள் ஒதுக்கீடு செய்யப்படும்' என்றார்.

