/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
விடுதியில் அடைத்து சித்ரவதை 4 மாதத்திற்கு பின் 'குருவி' மீட்பு
/
விடுதியில் அடைத்து சித்ரவதை 4 மாதத்திற்கு பின் 'குருவி' மீட்பு
விடுதியில் அடைத்து சித்ரவதை 4 மாதத்திற்கு பின் 'குருவி' மீட்பு
விடுதியில் அடைத்து சித்ரவதை 4 மாதத்திற்கு பின் 'குருவி' மீட்பு
ADDED : ஆக 31, 2024 12:12 AM
சென்னை, கன்னியாகுமரி மாவட்டம், வருகபலை கிராமத்தைச் சேர்ந்தவர் சாஜிமோன், 32; துபாயில் எலக்ட்ரீசியனாக பணிபுரிந்து வந்துள்ளார்.
சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள 'கிரீன் கேலக்சி' தங்கும் விடுதியில், சாஜிமோகன் அடைக்கப்பட்டுள்ளதாகவும், அவரை மீட்டு தர வேண்டும் எனவும், அவரது உறவினர்கள் இருவர், திருவல்லிக்கேணி போலீசாரிடம், நேற்று முன்தினம் வாய்மொழி புகார் அளித்தனர். அங்கு சென்ற போலீசார், சாஜிமோனை மீட்டனர்.
அவரை அடைத்து வைத்து சித்ரவதை செய்த திருவல்லிக்கேணி ஆசிப் பயஸ், 23, முகமது அலிம் அப்கான், 20, ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த வருந்தரதாஸ், 40, மதுரை கோபி கண்ணன், 36, ஆகிய நான்கு பேரை கைது செய்தனர்.
முக்கிய குற்றவாளியான கிரீன் கேலக்சி விடுதியின் உரிமையாளர் இம்ரான், 28, என்பவரை தேடுகின்றனர்.
விடுதியில் சாஜிமோன் அடைக்கப்பட்டது குறித்து, போலீசார் கூறியதாவது:
சாஜிமோனுக்கு, துபாயில் போதிய வேலை கிடைக்கவில்லை. அதனால், அங்கு பழக்கமான பென்னி, மாலிக் ஆகியோரது சூழ்ச்சி வலையில் சிக்கிய சாஜிமோன், கடத்தல் தொழில் செய்யும் குருவியாக மாறினார்.
துபாயில் இருந்து சென்னைக்கு, ஏப்., 30ல் சாஜிமோன் புறப்பட்டுள்ளார். அப்போது, ஆசனவாயிலில் வைத்துள்ள மூன்று தங்க கட்டிகளை, கிரீன் கேலக்சி விடுதி உரிமையாளர் இம்ரானிடம் எடுத்து கொடுத்தால், 40,000 ரூபாய் தருவதாக கூறியுள்ளனர்.
ஆனால், சம்பந்தப்பட்ட விடுதிக்கு வந்து, ஆசனவாயிலில் சோதித்தபோது, தங்க கட்டிகள் இல்லை. பென்னி மற்றும் மாலிக், தங்க கட்டிகளை வைப்பதுபோல் தன்னை ஏமாற்றி, அவற்றை எடுத்து கொண்டதாக, இம்ரானிடம் சாஜிமோன் தெரிவித்துள்ளார்.
அதை நம்பாத இம்ரான், அவரை விடுதி அறையில் நான்கு மாதங்களாக அடைத்து வைத்து, நான்கு பேரை விட்டு அவ்வப்போது அடித்து துன்புறுத்திஉள்ளார்.
குடும்பத்தினர் மொபைல் போனில் அழைக்கும்போது மட்டும், சாஜிமோன் துபாயில் இருந்து பேசுவதுபோல் பேச வைத்துள்ளனர். அப்போது, கத்தியை காட்டி மிரட்டி, தான் இருக்கும் இடம் குறித்து எதையும் தெரிவிக்கவிடாமல் பார்த்து கொண்டனர்.
இந்நிலையில், பக்கத்து அறையில் தங்கியிருந்த ஒருவர் வாயிலாக, மனைவிக்கு தகவல் அளித்துள்ளார். இதையடுத்தே அவர் மீட்கப்பட்டார். மேற்கொண்டு அவரிடமும், பிடிபட்ட நான்கு பேரிடமும் விசாரித்து வருகிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.