/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தமிழ் புத்தாண்டு தரிசனம் கோவில்களில் சிறப்பு ஏற்பாடு
/
தமிழ் புத்தாண்டு தரிசனம் கோவில்களில் சிறப்பு ஏற்பாடு
தமிழ் புத்தாண்டு தரிசனம் கோவில்களில் சிறப்பு ஏற்பாடு
தமிழ் புத்தாண்டு தரிசனம் கோவில்களில் சிறப்பு ஏற்பாடு
ADDED : ஏப் 14, 2024 12:54 AM
சென்னை:சோபகிருது ஆண்டில் இருந்து குரோதி ஆண்டு இன்று பிறந்தது. புத்தாண்டை முன்னிட்டு, சென்னை மற்றும் புறநகரில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில், மின் விளக்குகள் அலங்காரம் செய்யப்பட்டுள்ளன. சிறப்பு தரிசனத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஆண்டவர் கோவில்
தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, வடபழனி ஆண்டவர் கோவிலில், இன்று அதிகாலை 4:00 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. 4:30 மணிக்கு பள்ளியறை பூஜை நடக்கிறது. காலை 5:00 மணி முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர்.
காலை மூலவர் முருகப்பெருமான் தங்க நாணய கவசம், தங்கவேலுடன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். உச்சிகால பூஜை முடிந்ததும், மூலவருக்கு ராஜ அலங்காரம் செய்யப்படுகிறது.
மாலை அபிஷேகம் முடிந்ததும் புஷ்ப அங்கி சார்த்தப்படுகிறது. காலை முதல், இரவு 10:00 மணி வரை பக்தர்கள் முருகப்பெருமானை தரிசிக்கலாம்.
பக்தர்கள் வசதிக்காக நாள் முழுதும் பிரசாரதம் வழங்கப்படுகிறது. கோடை வெயிலை சமாளிக்கும் வகையில், பந்தல் போடப்பட்டுள்ளது. குளிர்ந்த நீர், நீர்மோர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அஷ்டலட்சுமி கோவில்
பெசன்ட்நகர் அஷ்டலட்சுமி கோவிலில், காலை 6:30 மணி முதல் மதியம் 1:00 மணி வரையிலும், மாலை 4:00 மணி முதல் இரவு 9:00 மணி வரையிலும், பக்தர்கள் தரிசனத்திற்கு நடை திறக்கப்படுகிறது.
அஷ்ட லட்சுமி சன்னிதிகளும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டுள்ளன. இன்று காலை 8:00 மணிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடக்கிறது. அதை தொடர்ந்து காலை 10:30 மணிக்கு குரோதி ஆண்டு பஞ்சாங்கம் வாசிக்கப்படுகிறது.
அதேபோல, கபாலீஸ்வரர், மருந்தீஸ்வரர், காரணீஸ்வரர், தேனுபுரீஸ்வரர், பார்த்தசாரதி பெருமாள், கற்பகாம்பாள், ரங்கநாதர் கோவில், குன்றத்துார் முருகன் உள்ளிட்ட கோவில்களில் பக்தர்கள் தரிசனத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

