ADDED : ஆக 22, 2024 12:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, மெரினா கடற்கரையில், 'நம்ம சென்னை செல்பி பாயின்ட்' பின்புறம், 1 கோடி ரூபாய் செலவில் மாற்றுத்திறனாளிகள் பாதை அமைக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து, பெசன்ட் நகர் கடற்கரையிலும், மாற்றுத்திறனாளிகள் செல்லும் வகையில் மரத்தாலான நடைபாதை அமைக்க பூர்வாங்க பணிகள் துவங்கப்பட்டுள்ளன.
தலப்பாக்கட்டி பிரியாணி உணவகம் மற்றும் காவல் நிலைய பூத்திற்கு இடைப்பட்ட கார்ல் ஸ்மித் நினைவகம் அருகில், 1.61 கோடி ரூபாய் மதிப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான நடைபாதை அமைக்கப்படுகிறது.
இதற்காக, தமிழ்நாடு மாநில கடலோர மண்டல ஒழுங்குமுறை ஆணையத்தின் அனுமதி பெறப்பட்டு உள்ளது. மரப்பாதையின் நீளம், 623 அடியாகவும், அகலம், 9.1 அடியாகவும் இருக்கும். இதற்கான பணிகள் துவக்கப்பட்டுள்ள நிலையில், நான்கு மாதங்களில் பயன்பாட்டிற்கு வரும் என, மாநகராட்சி தெரிவித்துள்ளது.