/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஸ்ரீபெரும்புதுார் 'சிப்காட்' தொழில் பூங்கா குழந்தைகள் காப்பகம் அமைக்க ஆயத்தம்
/
ஸ்ரீபெரும்புதுார் 'சிப்காட்' தொழில் பூங்கா குழந்தைகள் காப்பகம் அமைக்க ஆயத்தம்
ஸ்ரீபெரும்புதுார் 'சிப்காட்' தொழில் பூங்கா குழந்தைகள் காப்பகம் அமைக்க ஆயத்தம்
ஸ்ரீபெரும்புதுார் 'சிப்காட்' தொழில் பூங்கா குழந்தைகள் காப்பகம் அமைக்க ஆயத்தம்
ADDED : ஆக 23, 2024 12:18 AM
சென்னை, தமிழக அரசின், 'சிப்காட்' எனப்படும் தொழில் முன்னேற்ற நிறுவனம், 20 மாவட்டங்களில் ஏழு சிறப்பு பொருளாதார மண்டலங்களை உள்ளடக்கி, 40 தொழிற்பூங்காக்களை உருவாக்கியுள்ளது. பல துறைகளில், 3,275 தொழில் நிறுவனங்கள் செயல்படுகின்றன.
தொழில் பூங்காக்களில் உள்ள ஆலைகளில் பணிபுரியும் பெண் பணியாளர்களின் மழலை குழந்தைகளின் நலனை காக்கும் வகையில், அனைத்து தொழில் பூங்காவிலும், பொது - தனியார் பங்களிப்புடன் குழந்தைகள் காப்பகங்கள் துவக்க, 'சிப்காட்' முடிவு செய்துள்ளது.
முதற்கட்டமாக, காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுார் தொழிற்பூங்காவில், 'நோக்கியா' நிறுவனத்தின் கட்டடத்தில், குழந்தைகள் காப்பகம் அமைக்கும் நடவடிக்கையில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து, தொழில் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
ஸ்ரீபெரும்புதுார் பூங்கா, 2,374 ஏக்கர் உடையது. அங்கு, நோக்கியா நிறுவனத்திற்கு சொந்தமாக ஒரு கட்டடம் உள்ளது. அதில் குழந்தைகள் காப்பகம் அமைக்கும் வகையில் கட்டடம் கேட்கப்பட்டு உள்ளது.
அங்கு, ஸ்ரீபெரும்புதுார் பூங்காவில் உள்ள ஆலைகளில் பணிபுரியும் பெண்களின், பிறந்து ஆறு மாதம் முதல் உள்ள மழலை குழந்தைகளை சேர்த்து, அவர்கள் புரிந்து கொள்ளக்கூடிய மழலை பாடத்திட்டங்கள் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.
இந்த பணி, 'பிக்கி' அமைப்புடன் இணைந்து மேற்கொள்ளப்பட உள்ளது. இந்த காப்பகத்தில் கிடைக்கும் அனுபவம் வாயிலாகவும், குழந்தைகளுக்கு என்னென்ன தேவைப்படுகின்றன என்பதை அறிந்தும், அதற்கு ஏற்ப மற்ற பூங்காக்களில் காப்பகங்கள் துவக்கப்படும்.
குறிப்பாக, பெண் பணியாளர்கள் அதிகம் பணிபுரியும் சிறுசேரி தகவல் தொழில்நுட்ப பூங்கா, வல்லம் வடகால் தொழில் பூங்காக்களில் குழந்தைகள் காப்பகம் விரைந்து துவக்க முன்னுரிமை அளிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

