sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

சென்னையில் நட்சத்திர ஆமை கடத்தலுக்கு...கள்ளச்சந்தை! சர்வதேச அளவில் கும்பல்கள் கைகோர்ப்பு

/

சென்னையில் நட்சத்திர ஆமை கடத்தலுக்கு...கள்ளச்சந்தை! சர்வதேச அளவில் கும்பல்கள் கைகோர்ப்பு

சென்னையில் நட்சத்திர ஆமை கடத்தலுக்கு...கள்ளச்சந்தை! சர்வதேச அளவில் கும்பல்கள் கைகோர்ப்பு

சென்னையில் நட்சத்திர ஆமை கடத்தலுக்கு...கள்ளச்சந்தை! சர்வதேச அளவில் கும்பல்கள் கைகோர்ப்பு

2


ADDED : செப் 05, 2024 11:55 PM

Google News

ADDED : செப் 05, 2024 11:55 PM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் இருந்து, நட்சத்திர ஆமைகளை வெளிநாடுகளுக்கு கடத்துவதற்கான மையமாக, சென்னை மாறி வருகிறது என, வன உயிரின ஆர்வலர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

இந்தியா, பாகிஸ்தான், இலங்கை நாடுகளில் புதர் காடுகள், சதுப்பு நிலங்களை ஒட்டிய சமவெளி பகுதிகளில் நட்சத்திர ஆமைகள் காணப்படுகின்றன.

கடந்த, 2016 - 17ம் ஆண்டில் தன்னார்வ அமைப்புகள் வாயிலாக மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பு அடிப்படையில், நம் நாட்டில், 36,000 நட்சத்திர ஆமைகள் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், மலேஷியா, சிங்கப்பூர், தாய்லாந்து நாடுகளில் நட்சத்திர ஆமைகளை விலைக்கு வாங்க, அங்குள்ள மக்கள் மத்தியில் கடுமையான போட்டி காணப்படுகிறது.

வாஸ்து, மருந்து, உணவு, செல்லப்பிராணிகளாக வளர்ப்பது போன்ற காரணங்களுக்காக நட்சத்திர ஆமைகளுக்கு, இந்த நாடுகளில் கிராக்கி காணப்படுகிறது.

நட்சத்திர ஆமைகளின் ஓடுகளை பயன்படுத்தி தயாரிக்கப்படும் நகைகளுக்கு நல்ல சந்தை உள்ளதால், அதன் வர்த்தகம் கொடி கட்டி பறக்கிறது.

இது போன்ற வாய்ப்புகள் காரணமாக, இந்தியாவில் இருந்து நட்சத்திர ஆமைகளை, மலேஷியா, சிங்கப்பூர், தாய்லாந்து நாடுகளுக்கு கடத்துவது அதிகரித்துள்ளது.

கடந்த, 2023ல் சென்னையில் இருந்து கடத்தப்படஇருந்த, 400 நட்சத்திர ஆமைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்நிலையில், நடப்பு ஆண்டில், எட்டு மாதங்களில், 2,121 நட்சத்திர ஆமைகள் கடத்தல்காரர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டன. சென்னை விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகள் வாயிலாக இவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

தொடர் விசாரணையில், சென்னையில் கொளத்துார், புழல் உள்ளிட்ட பகுதிகளில் நட்சத்திர ஆமைகளை பதுக்கி, அவ்வப்போது வெளிநாடுகளுக்கு கடத்துவது தெரியவந்துள்ளது.

முன் எப்போதும் இல்லாத வகையில், சென்னையில் கடத்தலுக்காக வைக்கப்பட்டிருந்த நிலையில், நட்சத்திர ஆமைகள் பறிமுதல் செய்வது அதிகரித்துள்ளது, பல்வேறு நிலைகளில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

வன உயிரின குற்ற தடுப்பு பிரிவினர் கூறியதாவது:

தமிழகத்தில் ராமநாதபுரம் உள்ளிட்ட சில மாவட்டங்களில், நட்சத்திர ஆமைகள் வளர்கின்றன. அதேபோல் ஆந்திராவில் கோதாவரி ஆற்றை ஒட்டிய பகுதிகளில் நட்சத்திர ஆமைகள் இயல்பான நிலையில் கிடைக்கின்றன.

வன உரியின ஆர்வலர்கள் என்ற போர்வையில் சிலர், இங்குள்ள உள்ளூர் மக்களை அணுகி நட்சத்திர ஆமைகளை சேகரிக்கின்றனர்.

உள்ளூர் மக்களுக்கு சில நுாறு ரூபாய் கொடுத்து பெறப்படும் இந்த ஆமைகள், கடத்தல் கும்பலுடன் தொடர்பில் இருப்பவர்களுக்கு ஒன்று, 5,000 ரூபாய் வரையிலான விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

இவ்வாறு பெறப்படும் ஆமைகள், விமானம் மற்றும் கப்பல் வாயிலாக வெளிநாடுகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது. இதற்கு, மலேஷியா உள்ளிட்ட நாடுகளில் ஒன்றுக்கு, 25,000 ரூபாய் வரை விலை கிடைக்கிறது.

நீண்ட நாட்களுக்கு உணவு, தண்ணீர் இன்றி தாக்குப்பிடிக்கும் தன்மை காரணமாக, பெரிய டப்பாக்களில் அடைத்து நட்சத்திர ஆமைகள் எளிதாக கடத்தப்படுகின்றன.

விமான நிலையம், துறைமுகத்தில் கண்காணிப்பை தீவிரப்படுத்தினால், சாலை மார்க்கமாக, ஒடிசா, மேற்கு வங்காள மாநிலம் கோல்கட்டா ஆகிய இடங்களுக்கு கொண்டு சென்று, அங்கிருந்து வெளிநாடுகளுக்கு கடத்துகின்றனர்.

சர்வதேச அளவில் வர்த்தகம் தடை செய்யப்பட்ட நிலையில், இதை கடத்துவோரிடம் இருந்து பறிமுதல் செய்வது, அபராதம் விதிப்பது மட்டுமே முடிகிறது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

ஒருங்கிணைப்பு தேவை

தென்கிழக்கு ஆசிய நாடுகளில் மட்டுமின்றி, நம் நாட்டிலும் நட்த்திர ஆமைகள் உள்ளிட்ட உயிரினங்களை வீட்டில் செல்ல பிராணிகளாக வளர்ப்பது அதிகரித்துள்ளது. இதனால், கள்ளச்சந்தையில் இதன் விற்பனை ஜோராக நடக்கிறது. சர்வதேச தொடர்புடன் செயல்படும் நபர்கள் தினசரி அடிப்படையில் கடத்தலில் ஈடுபடுகின்றனர். இது விஷயத்தில் வனத்துறை, வன உயிரின குற்ற தடுப்பு பிரிவு, சுங்கத்துறை அதிகாரிகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். அப்போது தான் இந்த கடத்தலை தடுக்க முடியும்.

- தீபக் நம்பியார், 'எலபஸ் மாக்ஸிமஸ் இண்டிஸ்' அறக்கட்டளை நிர்வாகி

35 ஆண்டுகள் தான் வாழும்!

 360 வகை ஆமைகள் 36,000 நட்சத்திர ஆமைகள்: ஆண் ஆமை 20 செ.மீ., பெண் ஆமை 30 செ.மீ., வளரும் ஆண்டுக்கு இரு முறை முட்டையிடும்; ஒரு முறையில் 6 முட்டைகள் வரை இடும். ஆயுள் காலம், 30 முதல் 35 ஆண்டுகள்  தாவர உண்ணியான இது, புல், பழம், பூக்கள் ஆகியவற்றை விரும்பி உண்ணும்



மலேஷிய கும்பலுடன் தொடர்பு

நட்சத்திர ஆமை கடத்தல் குறித்து, வன உயிரின ஆர்வலர்கள் கூறியதாவது: தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் நட்சத்திர ஆமைகள் கடத்தல் தொடர்பாக பிடிபடும் நபர்கள் வாயிலாக, அவர்களின் பின்னணியை விசாரிக்க வேண்டும். இத்தகைய நபர்களை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். மலேஷியாவில், 'நிஞ்சா டர்டில் கேங்' என்ற பெயரில் செயல்படும் சர்வதேச கும்பல் தான் நட்சத்திர ஆமைகள் கடத்தலில் முக்கிய பங்கு வகிக்கிறது. சில மாதங்கள் முன், இந்த கும்பலைச் சேர்ந்த சிலர் மலேஷியாவில் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தமிழக தொடர்புகள் குறித்த விபரங்கள் வெளியானதாக தெரிகிறது. ஆனால், இவர்களிடம் இருந்து கூடுதல் விபரம் பெற்று தமிழகத்தில் இதில் முக்கிய பங்கு வகிக்கும் நபர்களை நிரந்தரமாக ஒடுக்குவதில், அதிகாரிகள் ஆர்வம் காட்டவில்லை. இதனால், சர்வதேச அளவில் நட்சத்திர ஆமைகள் கடத்தலில், சென்னை முக்கிய மையமாக மாறிவருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.



- நமது நிருபர் -






      Dinamalar
      Follow us