/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
' பிக் - அப் பாயின்ட் ' திடீர் மாற்றம் விமான நிலையத்தில் பயணியர் அவதி
/
' பிக் - அப் பாயின்ட் ' திடீர் மாற்றம் விமான நிலையத்தில் பயணியர் அவதி
' பிக் - அப் பாயின்ட் ' திடீர் மாற்றம் விமான நிலையத்தில் பயணியர் அவதி
' பிக் - அப் பாயின்ட் ' திடீர் மாற்றம் விமான நிலையத்தில் பயணியர் அவதி
ADDED : ஜூலை 30, 2024 12:50 AM

சென்னை சென்னை விமான நிலையத்தில், வாடகை கார்களின் 'பிக் - அப் பாயின்ட்' பகுதி திடீரென அடுக்குமாடி வாகன நிறுத்தம் பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளது.
சென்னை விமான நிலையத்தில் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணியர், தனியார் வாடகை கார்களில் ஏறி செல்வதற்கு வசதியாக, 'பிக் - அப் பாயின்ட்' செயல்பட்டு வந்தது. நேற்று பிக் - அப் பாயின்ட், எந்த முன்னறிவிப்பும் இல்லாமல், திடீரென இடம் மாற்றப்பட்டது.
இது வரை செயல்பட்டு வந்த இடத்தில் இருந்து 1 கி.மீ., தொலைவில் உள்ள, மல்டி லெவல் கார் பார்க்கிங் எனப்படும் அடுக்குமாடி வாகன நிறுத்தத்திற்கு நேற்று முதல் மாற்றப்பட்டுள்ளது.
இதனால், கர்ப்பிணியர், முதியோர், குழந்தைகள் என, விமானப்பயணியர் பலரும் அல்லாடும் நிலைக்குதள்ளப்பட்டனர்.
பயணியரை புதிய பிக் - அப் பாயின்ட் பகுதிக்கு அழைத்துச் செல்வதற்கு போதிய பேட்டரி வாகனங்கள் இல்லாததால், காலதாமதம் ஏற்படுகிறது.
இதனால் உடைமைகளுடன் 1 கி.மீ., துாரத்துக்கு நடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இயக்கப்படும் பேட்டரி வாகனங்கள், மல்டி லெவல் கார் பார்க்கிங் கட்டடத்தின் தரைப்பகுதி வரை மட்டுமே இயக்கப்படுகிறது.
அங்கிருந்து லிப்ட் வாயிலாக, கார்கள் காத்திருக்கும் இரண்டாவது தளம் அல்லது மூன்றாவது தளத்திற்கு செல்ல வேண்டும்.
அதிக பயணியர், தங்களின் உடைமைகளுடன் ஏறும் போது, அதிக எடை காரணமாக லிப்ட் இயக்க முடிவதில்லை. இதனால் லிப்டுக்கும் நீண்ட வரிசையில் பயணியர் காத்திருக்க வேண்டியுள்ளது.
பயணியர் கூறியதாவது:
வழக்கமாக, விமானங்களில் இருந்து இறங்கிய உடன் எளிதில் வாடகை கார் கிடைத்துவிடும். ஆனால், இப்போது வேறு இடத்திற்கு சென்று, மாற வேண்டியுள்ளது. பயணியருக்கு விமான நிலைய ஆணைய அதிகாரிகள் முன் அறிவிப்பு தந்திருந்தால், இவ்வளவு நெருக்கடி ஏற்பட்டிருக்காது.
பேட்டரி வாகனங்களில் சென்றாலும், லக்கேஜ் உடன் லிப்டில் ஏறிச் செல்வது கஷ்டமாக உள்ளது. குடியுரிமை, சுங்க சோதனை என நீண்ட நேரம் காத்திருந்து, வெளியே வரும் போது, பிக் -- அப் பாயின்ட் புது பிரச்னையாக வந்துள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
பிக் -அப் பாயின்ட் பகுதியை மாற்றுவது குறித்து, பலமுறை கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட்டது. ஏற்கனவே எடுக்கப்பட்ட முடிவின் படி தான் மல்டி லெவல் கார் பார்க்கிங் இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. இதில் புதிய மாற்றம் வராது. எங்கள் சார்பில் பேட்டரி வாகனங்கள் போதிய அளவில் இயக்கப்படுகின்றன.மற்ற விமான நிலையங்களில், வாடகை கார் பிக் - அப் பாயின்ட் அமைந்துள்ள பகுதிகளின் துாரத்தை விட, சென்னை விமான நிலையத்தில் குறைந்த துாரத்தில் தான் உள்ளது.
- சென்னை விமான நிலைய ஆணைய அதிகாரிகள்
ஏ2 வாயில் எதிர்புறம் இருந்த பிக் - அப் பாயின்ட் இடத்தை, இப்போது மல்டி லெவல் கார் பார்க்கிங் அருகே மாற்றியுள்ளனர். பிக் - அப் பாயின்ட் மாற்றப்படுவதாக, கடந்த 24ம் தேதி இ-மெயில் வந்தது. குறுகிய நாட்களில் எப்படி மாற்ற முடியும் என கேட்ட போது, தனியார் ஒப்பந்த நிறுவனமும், விமான நிலைய ஆணைய அதிகாரிகளும் உரிய பதில் தரவில்லை. பிரிபெய்டு வாடகை கார்களுக்கு மூன்றாவது மாடியில் நிறுத்துமிடம் ஒதுக்கப்பட்டுள்ளது. உடைமைகளுடன் வரும் பயணியரை, கீழ் தளத்தில் காத்திருந்து நாங்கள் மாடிக்கு அழைத்துச் செல்கிறோம். இது, இரு தரப்புக்கும் சிக்கலாக உள்ளது. இங்குள்ள தனியார் ஒப்பந்த நிறுவன ஊழியர்கள், மிக மோசமாக நடந்து கெள்வதோடு, ஒருமையில் பேசுவது பயணியரை கோபமடைய செய்கிறது. இதனால் சச்சரவுகள் ஏற்படுகின்றன. இப்பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்காவிடில் போராட்டம் நடத்த உள்ளோம்.
- ஏர்போர்ட் ப்ரிபெய்டு மீட்டர் டாக்சி உரிமையாளர் மற்றும் ஓட்டுனர் சங்கம்