/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
புழல் பகுதியில் நள்ளிரவில் திடீர் சாலை மறியல்
/
புழல் பகுதியில் நள்ளிரவில் திடீர் சாலை மறியல்
ADDED : ஏப் 26, 2024 12:39 AM
புழல், வண்ண மீன் வளர்ப்பு பண்ணைக்காக, ஆழ்துளை குழாய் கிணறு அமைப்பதை எதிர்த்து, பொதுமக்கள் நள்ளிரவில் சாலை மறியல் செய்தனர்.
சென்னை மாதவரம் மண்டலம், புழல் அண்ணா நினைவு நகரில், 'அக்வா ஜூ' என்ற பெயரில், வண்ண மீன் வளர்ப்பு பண்ணை உள்ளது. அந்த பண்ணையின் தண்ணீர் தேவைக்காக, நேற்று முன்தினம் இரவு, ஆழ்துளை குழாய் கிணறு அமைக்கும் பணி துவங்கியது.
தகவல் அறிந்த பொதுமக்கள், அந்த மீன் பண்ணை முன் திரண்டு, குழாய் அமைக்க எதிர்ப்பு தெரிவித்தனர்.
'மீன் பண்ணைக்கு, ஏற்கனவே நான்கு ஆழ்துளை குழாய் கிணறுகள் உள்ளன. அதனால், சுற்றுவட்டாரத்தில், நிலத்தடி நீர் மட்டம் மிகவும் குறைந்து விட்டது. இந்த நிலையில், மேலும் ஒரு குழாய் அமைத்தால், குடிநீருக்காக அலைய நேரிடும். அதனால், ஆழ்துளை குழாய் அமைக்க கூடாது' என்றனர்.
பண்ணையாளர்களுக்கும், பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதிருப்தி அடைந்த மக்கள், கதிர்வேடு சாலை சந்திப்பில் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்த புழல் போலீசார், அங்கு சென்று பேச்சு நடத்தினர். பிரச்னை குறித்து சம்பந்தப்பட்ட துறையிடம் புகார் செய்து, சட்ட ரீதியாக நடவடிக்கை பெறும்படி, போலீசார் அறிவுறுத்தினர்.
அதன்பின் மறியலை கைவிட்ட மக்கள், புழல் போலீசார், மாதவரம் வருவாய்த் துறை மற்றும் மாநகராட்சி அதிகாரிகளிடம், நேற்று காலை புகார் செய்தனர்.

