/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
அபாய விளம்பர பேனர்கள் கணக்கெடுக்கிறது மாநகராட்சி
/
அபாய விளம்பர பேனர்கள் கணக்கெடுக்கிறது மாநகராட்சி
ADDED : ஆக 10, 2024 12:42 AM
சென்னை, சென்னை மாநகராட்சி பகுதியில் விதிகளை மீறி, பிரதான சாலை சிக்னல்கள், சந்திப்புகளில் வாகன ஓட்டிகளை கவரும் வகையிலும், விபத்தை ஏற்படுத்தும் வகையிலும் , 4,000க்கும் மேற்பட்ட விளம்பர பேனர்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
மும்பையில் சூறைக்காற்றில் விளம்பர பேனர் சரிந்து 14 பேர் உயிரிழந்த அசம்பாவிதம் போல, சென்னையிலும் ஏற்படும் வகையில் பல்வேறு இடங்களில் விளம்ப பேனர்கள் அமைக்கப்பட்டுள்ளன.
சென்னையில் வைக்கப்பட்டுள்ள ராட்சத விளம்பர பேனர்களுக்கும் மாநகராட்சி முறையாக அனுமதி அளிக்காத நிலையில், நீதிமன்ற அறிவுறுத்தலை காரணம் காட்டி, அவற்றை அகற்றுவதில் மாநகராட்சி அதிகாரிகள் மெத்தனம் காட்டி வருகின்றனர்.
அத்துடன் புறநகர் பகுதிகளின் நெடுஞ்சாலையோரம் புதிய விளம்பர பேனர்கள் முளைத்து வருவதும் அதிகரித்துள்ளது.
இந்நிலையில், வடகிழக்கு பருவமழையின்போது ஏற்படும் புயல் பாதிப்பு உள்ளிட்டவற்றால், விளம்பர பேனர்களால் விபத்துகள் ஏற்படும் அச்சுறுத்தலை தடுக்கும் வகையில், அனைத்து விளம்பர பேனர்களையும் கணக்கெடுக்க மாநகராட்சி கமிஷனர் குமரகுருபரன் உத்தரவிட்டுள்ளார்.
மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:
சென்னையின் அனைத்து பகுதிகளிலும் உள்ள விளம்பர பேனர்கள் குறித்த கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. இந்த கணக்கெடுப்பின்படி, பாதுகாப்பு அம்சங்கள் இல்லாத மற்றும் விபத்தை ஏற்படுத்தக்கூடிய வகையில் உள்ள விளம்பர பேனர்கள் அகற்றப்படும். மேலும், போலீசாரின் தடையில்லா சான்று பெறப்பட்ட விளம்பர பேனர்கள் மட்டுமே அனுமதி அளிக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி விதி 2023ன்படி பாதுகாப்பு அம்சங்களுடன், விளம்பர பேனர்களுக்கு அனுமதி அளிக்க மாநகராட்சி திட்டமிட்டு உள்ளது. இதனால், ஒவ்வொரு பேனருக்கு ஆண்டுக்கு, 6,000 ரூபாய் வரை வருமானம் கிடைக்கும்.
அனுமதி அளிக்கப்படும் விளம்பர பேனர்களால் விபத்து நேரிட்டால், சம்பந்தப்பட்ட கட்டட உரிமையாளர், நிறுவனம் தான் பொறுப்பேற்க வேண்டும். விபத்து நேரிட்டால், மீண்டும் அதே கட்டடத்தில் விளம்பர பேனர்கள் வைக்க அனுமதி அளிக்கப்படாது.
ஆனால், 'ஆறாயிரம் ரூபாய் வருவாய்க்காக, சென்னையின் அழகை மறைக்கும் வகையிலும், பாதசாரிகள் மற்றும் வாகனங்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகவும் மாறியுள்ள விளம்பர பேனர்களை ஏன் அனுமதிக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.