/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
'நல்ல சக்தி அ.தி.மு.க., தீய சக்தி தி.மு.க., எப்போதும் எங்களுக்குள் தான் போட்டி'
/
'நல்ல சக்தி அ.தி.மு.க., தீய சக்தி தி.மு.க., எப்போதும் எங்களுக்குள் தான் போட்டி'
'நல்ல சக்தி அ.தி.மு.க., தீய சக்தி தி.மு.க., எப்போதும் எங்களுக்குள் தான் போட்டி'
'நல்ல சக்தி அ.தி.மு.க., தீய சக்தி தி.மு.க., எப்போதும் எங்களுக்குள் தான் போட்டி'
ADDED : ஏப் 01, 2024 01:12 AM

கொட்டிவாக்கம்:''நல்ல சக்தி அ.தி.மு.க.,வுக்கும், தீய சக்தி தி.மு.க.,வுக்கும் இடையே தான் எப்போதுமே போட்டி. மற்ற கட்சி பற்றியெல்லாம் மக்கள் கண்டுகொள்ளமாட்டார்கள்,'' என, பிரசார கூட்டத்தில் தென் சென்னை அ.தி.மு.க., வேட்பாளர் ஜெயவர்தன் கிண்டல் அடித்தார்.
தென் சென்னை லோக்சபா தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் ஜெயவர்தன், சோழிங்கநல்லுார் சட்டசபை தொகுதிக்குட்பட்ட கொட்டிவாக்கத்தில், நேற்று காலை பிரசாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது, அவர் பேசியதாவது:
லாப நோக்கத்துடன் செயல்படும் தி.மு.க., அரசு, சிறுவர்கள் விரும்பி சாப்பிடும் ஐஸ்கிரீம் விலையைகூட உயர்த்திவிட்டது. இவர்களுக்கு தக்க பாடம் புகட்ட மக்கள் முடிவு செய்துவிட்டனர்.
சென்னையில், வெள்ளம் வரவழைத்ததை தவிர, கடந்த ஐந்தாண்டு காலத்தில், தி.மு.க., - எம்.பி.,க்கள், தொகுதியில் எந்த பணியையும் செய்யவில்லை.
மழைநீர் வடிகால் கட்ட 4,500 கோடி ரூபாயை ஒதுக்கி, 98 சதவீதம் பணிகள் முடிந்துவிட்டதாக தி.மு.க., அமைச்சர்கள் பொய் கூறினர். வெள்ளம் வந்த பின், 32 சதவீத பணிகளே முடிந்துள்ளது என கூறினர். கடந்த ஐந்து ஆண்டுகளில், தி.மு.க., - எம்.பி.,க்கள், தொகுதி வளர்ச்சிக்காக ஒரு முறைகூட உள்துறை அமைச்சரை சந்திக்கவில்லை.
பெருங்குடி குப்பைக் கிடங்கில், 1,200 ரூபாய் கோடி ரூபாய் மதிப்பில், 'பயோ மைனிங்' திட்டத்தை கொண்டு வந்தது அ.தி.மு.க., தான். ஆனால், அந்த திட்டத்திற்கு தி.மு.க., அரசு ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது.
பா.ஜ., வேட்பாளர் தமிழிசை, கவர்னராக பணியாற்றியபோது, தென் சென்னை வளர்ச்சிக்காக மத்திய அரசிடம் கோரிக்கை வைத்திருந்தால், கண்டிப்பாக நிறைவேற்றப்பட்டிருக்கும். ஆனால் அவர் செய்யவில்லை.
பா.ஜ., தலைவர்கள் பலர், தென் சென்னையில் போட்டியிட விருப்பம் தெரிவித்தனர். ஆனால், தன் அதிகாரத்தை பயன்படுத்தி, தமிழிசை வேட்பாளராக வந்துவிட்டார்.
தமிழகத்தை பொறுத்தவரை, அ.தி.மு.க., எனும் நல்ல சக்தி, தி.மு.க., எனும் தீய சக்தி இடையேதான் எப்போதும் போட்டி. பா.ஜ.,வை பற்றி ஊடகங்கள்தான் பேசி வருகின்றன. மக்கள் மத்தியில், அந்த கட்சி பற்றி எவ்வித பேச்சும் இல்லை.
இவ்வாறு அவர் பேசினார்.

