/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பாதியில் விடுபட்ட வடிகாலை இணைக்காமல் புது பணியை துவக்கிய நெடுஞ்சாலை துறை
/
பாதியில் விடுபட்ட வடிகாலை இணைக்காமல் புது பணியை துவக்கிய நெடுஞ்சாலை துறை
பாதியில் விடுபட்ட வடிகாலை இணைக்காமல் புது பணியை துவக்கிய நெடுஞ்சாலை துறை
பாதியில் விடுபட்ட வடிகாலை இணைக்காமல் புது பணியை துவக்கிய நெடுஞ்சாலை துறை
ADDED : ஜூன் 27, 2024 12:23 AM

பொழிச்சலுார், தாம்பரம் மாநகராட்சி, பம்மல் ஸ்டேட் பாங்க் காலனி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து வெளியேறும் மழைநீர், ஆண்டாள் நகர், மூவர் நகர், கவுல்பஜார் ஊராட்சி குடியிருப்பு வழியாக வெளியேறி, அடையாறு ஆற்றில் கலக்கும். மழை சற்று அதிகமாக பெய்தால், இப்பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கும்.
கடந்த 2015ல் பெய்த மழையில், கவுல்பஜார் ஊராட்சி வெள்ளத்தில் மூழ்கியது. ஒவ்வொரு ஆண்டும், இப்பிரச்னை தொடர்வதால் கால்வாய் கட்டி, குடியிருப்பு பகுதியில் வெள்ளம் தேங்காத வகையில், அடையாறு ஆற்றுக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என கோரிக்கை எழுந்தது.
இதையடுத்து, பம்மல் ஸ்டேட் பாங்க் காலனியில் இருந்து ஆண்டாள் நகர் வழியாக மூவர் நகர் வரை, 2,000 அடி துாரத்திற்கு, 2 கோடி ரூபாய் செலவில் கால்வாய் கட்டும் பணி, கடந்த 2023 செப்டம்பரில் துவங்கியது. ஆனால், இதுவரை பணிகள் முழுமையாக முடிய வில்லை.
பொழிச்சலுார் மெயின் சாலையில், இடையில் உள்ள மின் கம்பங்களை அகற்றாமல், பாதி பாதியாக கால்வாய் கட்டியுள்ளனர்.
மற்றொருபுறம், மழைநீர் செல்வதற்காக கட்டப்பட்ட இக்கால்வாய், முழுக்க முழுக்க கழிவுநீர் தேக்கமாக மாறிவிட்டது. இதனால் கொசுத்தொல்லை, துர்நாற்றம் என, சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், மூவர் நகர் முதல் அடையாறு ஆறு வரை கால்வாய் கட்டும் பணியை, நெடுஞ்சாலைத் துறை துவக்கி உள்ளது.
ஏற்கனவே கட்டி, பாதி பாதியாக விடப்பட்ட கால்வாய்களை இணைக்க நடவடிக்கை எடுக்காமல், புதிதாக கால்வாய் கட்டும் பணியை துவக்கி உள்ளதற்கு, அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
மேலும், பாதி பாதியாக நிற்கும் இடங்களில், இரவில் வாகன ஓட்டிகள் தவறி விழுந்து, விபத்தில் சிக்கி வருகின்றனர்.
பாதியாக விடப்பட்டு உள்ள கால்வாயை முடித்த பின், இப்புதிய கால்வாயை கட்ட வேண்டும். அதற்கு, நெடுஞ்சாலைத் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.