/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சோமங்கலம் சாலையில் சரிந்த சிறுபாலம் வாகன ஓட்டிகள் வசதிக்காக மாற்று பாதை
/
சோமங்கலம் சாலையில் சரிந்த சிறுபாலம் வாகன ஓட்டிகள் வசதிக்காக மாற்று பாதை
சோமங்கலம் சாலையில் சரிந்த சிறுபாலம் வாகன ஓட்டிகள் வசதிக்காக மாற்று பாதை
சோமங்கலம் சாலையில் சரிந்த சிறுபாலம் வாகன ஓட்டிகள் வசதிக்காக மாற்று பாதை
ADDED : ஆக 29, 2024 12:29 AM

தாம்பரம், தாம்பரத்தில் இருந்து கிஷ்கிந்தா வழியாக, சென்னை புறவழி மற்றும் வெளிவட்ட சாலைகளை கடந்து, சோமங்கலத்திற்கு சாலை செல்கிறது. முக்கிய சாலை என்பதால், தினம் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன.
இச்சாலையை ஒட்டி, பாப்பான் கால்வாய் மற்றும் அடையாறு ஆறு செல்கிறது. ஒவ்வொரு மழையின்போதும், சாலையை ஒட்டிய நிலங்களில் வெள்ளம் தேங்கி, வடிய பல மாதங்களாகும்.
இதன் காரணமாக, அப்பகுதியில் மண் நெகிழ்வு தன்மையுடன், பிடிமானம் குறைவதால், சாலை உள்வாங்கி பள்ளம் ஏற்படுவது தொடர்கிறது. இதனால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர்.
சாலை உள்வாங்குவதை தடுக்க, 12 கோடி ரூபாய் செலவில், 1 கி.மீ., துாரத்திற்கு சாலையை அகலப்படுத்தி, கான்கிரீட் தடுப்பு சுவர் அமைக்கும் பணி நடந்து வருகிறது. சாலையின் மட்டத்தில் இருந்து, 13 அடி ஆழத்திற்கு தடுப்பு சுவர் கட்டப்படுகிறது.
இதற்காக சாலையோரம் பள்ளம் தோண்டப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக, இந்திரா நகர் மற்றும் குடிசை மாற்று வாரிய குடியிருப்புக்கு செல்வதற்கான சிறுபாலத்தை ஒட்டி , சில நாட்களுக்கு முன் பள்ளம் தோண்டப்பட்டது. அப்போது, சிறுபாலம் சரியாமல் இருக்க, இரும்பு தடுப்புகள் நடப்பட்டன.
எனினும், இந்த சிறுபாலம் திடீரென சரிந்து, உள்வாங்கியது. இதனால், 500 குடியிருப்புள்ள இந்திரா நகர் மற்றும் குடிசை மாற்று வாரிய குடியிருப்புக்கான போக்குவரத்து தடைப்பட்டது.
அலுவலகம் உள்ளிட்ட பணிகளுக்காக, வாகனங்களில் செல்வோர் பாதிக்கப்பட்டனர்.
இதையடுத்து மாநகராட்சி அதிகாரிகள், இந்திரா நகரில் இருந்து வெங்கடேஸ்வரா நகர் வழியாக, குடிசை மாற்று வாரிய குடியிருப்பு செல்ல தற்காலிகமாக மாற்று பாதை அமைத்துள்ளனர்.
மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:
தாம்பரம் - கிஷ்கிந்தா சாலையில் இருந்து இந்திரா நகரை இணைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள சிறுபாலம், 'பாக்ஸ் கல்வெட்டு' வடிவமைப்பை உடையது.
சரிந்து, உள்வாங்கியுள்ள இந்த சிறுபாலத்தை, தடுப்பு சுவர் கட்டும் பணி முடிந்தவுடன், கீழ் பகுதியில் தரமான கான்கிரீட் தரை அமைத்து, அதன்மீது சிறுபாலத்தை அப்படியே துாக்கி வைத்து, வழக்கம் போல் பயன்படுத்தலாம். விரைவில் இப்பணி முடிந்துவிடும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.