/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சாலையில் ஆறாக ஓடிய தண்ணீர் அடையாறில் கடும் நெரிசல்
/
சாலையில் ஆறாக ஓடிய தண்ணீர் அடையாறில் கடும் நெரிசல்
சாலையில் ஆறாக ஓடிய தண்ணீர் அடையாறில் கடும் நெரிசல்
சாலையில் ஆறாக ஓடிய தண்ணீர் அடையாறில் கடும் நெரிசல்
ADDED : ஆக 28, 2024 12:21 AM

சென்னை, மெட்ரோ ரயில் பணியின் போது வெளியேற்றிய தண்ணீர், மழைநீர் வடிகால் அடைப்பு காரணமாக வெளியேறி, சாலையில் ஆறாக ஓடியது. இதனால், அடையாறில் இருந்து மெரினா மற்றும் மந்தைவெளி நோக்கிச் செல்லும் தினகரன் சாலை, ஆர்.கே.மடம் சாலையில், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
ஆர்.கே.மடம் சாலை - தினகரன் சாலை - துர்காபாய் தேஷ்முக் சாலை ஆகிய மூன்று சாலைகள் சந்திக்கும் இடத்தில், முக்கோண வடிவிலான மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில், மெட்ரோ ரயிலுக்கான சுரங்கம் தோண்டும் பணி நடக்கிறது.
இங்கு தேங்கும் தண்ணீர், ராட்சத மோட்டார் வாயிலாக, அருகிலுள்ள மழைநீர் வடிகாலில் விடப்படுகிறது. இந்த தண்ணீர், அடையாறு ஆற்றில் கலக்கும் வகையில், மழைநீர் வடிகால் கட்டமைப்பு உள்ளது. மேற்கண்ட வடிகாலில் அடைப்பு ஏற்பட்டதால், நேற்று காலை தண்ணீர் வெளியேறி, சாலையில் ஆறாக ஓடியது.
இதனால், அடையாறில் இருந்து மந்தைவெளி மற்றும் மெரினா நோக்கி செல்லும் துர்காபாய் தேஷ்முக் சாலை,
ஆர்.கே.மடம் சாலை மற்றும் தினகரன் சாலையில், கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
பள்ளி, கல்லுாரி மற்றும் பணிக்கு புறப்பட்டோர் மிகவும் பரிதவித்தனர். ஆம்புலன்ஸ் ஒன்றும் நெரிசலில் சிக்கியது.
போக்குவரத்து போலீசார், உடனே களத்தில் இறங்கினர். மெட்ரோ ரயில் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் உதவியுடன், அடைப்பு ஏற்பட்ட வடிகால் பகுதியை உடைத்து சரி செய்தனர். இதையடுத்து, வடிகாலில் நீரோட்டம் சீரானது. இந்த பிரச்னை காரணமாக, போக்குவரத்து சீராக இரண்டு மணி நேரம் வரை ஆனது.
போக்குவரத்து போலீசார் கூறியதாவது:
குடிநீர் வாரியம், சாலையில் குழாய் பதித்த பள்ளத்தை முறையாக சீரமைக்காததால், வாகனங்கள் மெதுவாக செல்கின்றன. இன்று, வடிகாலில் ஏற்பட்ட அடைப்பால், தண்ணீர் சாலையில் பாய்ந்ததால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அமைச்சர்கள், நீதிபதிகள் வசிக்கும் பகுதி என்பதால், அடையாறில் இருந்து சென்னையின் முக்கிய பகுதிகளுக்கு செல்லும் இந்த சாலையில் நெரிசல் ஏற்படாத வகையில், பணிகளை திட்டமிட்டு செய்ய, மெட்ரோ ரயில் நிர்வாகம், மாநகராட்சி, குடிநீர் வாரிய அதிகாரிகளிடம் வலியுறுத்தி உள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.