/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
திரும்பும் திசையெல்லாம் திணறடிக்கும் வாகன நெரிசல் மந்தகதியில் நடக்கும் சாலை பணிகளால் தொடரும் அவதி
/
திரும்பும் திசையெல்லாம் திணறடிக்கும் வாகன நெரிசல் மந்தகதியில் நடக்கும் சாலை பணிகளால் தொடரும் அவதி
திரும்பும் திசையெல்லாம் திணறடிக்கும் வாகன நெரிசல் மந்தகதியில் நடக்கும் சாலை பணிகளால் தொடரும் அவதி
திரும்பும் திசையெல்லாம் திணறடிக்கும் வாகன நெரிசல் மந்தகதியில் நடக்கும் சாலை பணிகளால் தொடரும் அவதி
ADDED : ஜூலை 16, 2024 12:19 AM

சென்னை, மெட்ரோ ரயில் பணிகள், மழைநீர் வடிகால் பணிகள், சாலை பணிகளில் தொடரும் மந்த நிலையால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வாகன நெரிசல் திணறடித்து வருகிறது.
அதே போல, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பெய்து வரும் மழையால், பிரதான சாலையில் ஆங்காங்கே மழைநீர் தேங்கி வருவதாலும் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
தென் மாவட்டங்களில் இருந்து, ஜி.எஸ்.டி., சாலை வழியாக வரும் வாகனங்கள், சென்னை நகருக்குள் நுழையும் இடமாக, பெருங்களத்துார் உள்ளது. இதை கருத்தில் கொண்டு, பெருங்களத்துார் முதல் மகேந்திரா சிட்டி வரை, ஜி.எஸ்.டி., சாலை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
ஆனால், பெருங்களத்துாரில், இரணியம்மன் கோவில் அமைந்துள்ள பகுதியில், பல மீட்டர் துாரத்திற்கு சாலை விரிவாக்கம் செய்யும் பணியில் தாமதம் ஏற்பட்டு வருகிறது.
இரணியம்மன் கோவிலை, பெருங்களத்துார் - பீர்க்கன்காரணை- வண்டலுார் மக்கள் கிராம தேவதையாக வழிப்பட்டு வருகின்றனர். இக்கோவில் அமைந்துள்ள இடத்தில், சாலை விரிவாக்கம் செய்யப்பட உள்ள அளவை, நெடுஞ்சாலைத் துறையினர் அளந்து, குறித்துள்ளனர்.
அதேநேரத்தில், பின்புறத்தில் உள்ள தனியார் நிறுவனம், கோவிலை பின்புறம் நகற்றி வைக்க, 10.5 சென்ட் நிலத்தை, கோவில் பெயரில் செட்டில்மென்ட் தானமாக வழங்க முன்வந்துள்ளது.ஆனாலும், அதற்கான நடவடிக்கைகள் காலதாமதமாகி வருகின்றன.
நேற்றும் வழக்கம் போல, கூடுவாஞ்சேரி துவங்கி குரோம்பேட்டை வரை, வாகனங்கள் அணி வகுத்து நின்றன. சாரல் மழை காரணமாகவும், சாலையோர வாகன ஆக்கிரமிப்பாலும், பல இடங்களில் வாகனங்கள் ஊர்ந்து சென்றன.
வளசரவாக்கம்
வளசரவாக்கம் ஆற்காடு சாலை, போரூர் -- மவுன்ட் பூந்தமல்லி நெடுஞ்சாலை மற்றும் மதுரவாயல் - கோயம்பேடு - பூந்தமல்லி நெடுஞ்சாலையிலும், நேற்று கடும் வாகன நெரிசல் ஏற்பட்டது.
வளசரவாக்கம் -ஆற்காடு சாலையில், மெட்ரோ ரயில் பணிகள் நடந்து வருகிறது. இதனால், சாலை குறுகலாகியுள்ளது. அத்துடன், மழையால், சாலையில் உள்ள பள்ளங்களில் மழைநீர் தேங்கியும், சேறும் சகதியுமாக மாறியதால், காலை மற்றும் மாலை நேரத்தில் வாகனங்கள் ஊர்ந்து சென்றன.
அதேபோல், மதுரவாயல் மற்றும் கோயம்பேடு ஆகிய பகுதிகளை இணைக்கும் மதுரவாயல் பூந்தமல்லி நெடுஞ்சாலையிலும், பூந்தமல்லி மற்றும் கிண்டி ஆகிய பகுதிகளை இணைக்கும் மவுன்ட் -- -பூந்தமல்லி நெடுஞ்சாலையிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
அண்ணா நகர்
அண்ணா நகர், திருமங்கலம், அரும்பாக்கம், அமைந்தகரை பகுதிகளில் நேற்று வழக்கத்தை விட போக்குவரத்து நெரிசல் கூடுதாக இருந்தது. இதற்கும் மழை மற்றும் சாலை பள்ளங்கள் காரணமாக இருந்தது.
திருமங்கலம் - அண்ணா நகர் ரவுண்டனாவில் சில இடங்களில் சிக்னல்களும் இயங்கவில்லை.
கோயம்போடு மேம்பாலத்தில் இருந்து திருமங்கலம் 100 அடி செல்லும் சாலையில், நேற்று காலையும் மாலையும் நெரிசலாக இருந்தது. அதேபோல், பூந்தமல்லி நெடுஞ்சாலையில், அரும்பாக்கம், அமைந்தகரை, கீழ்ப்பாக்கம், சேத்துப்பட்டு உள்ளிட்ட இடங்களிலும் நெரிசல் அதிகளவில் இருந்தது.
கொளத்துார்
புழல் மற்றும் விநாயகபுரத்திலிருந்து கொளத்துார் செல்லும் ரெட்டேரி நான்கு முனை சந்திப்பில், மேம்பாலம் கட்டுமானப்பணி நடக்கிறது.
தற்போது மேம்பாலப்பணி முடிந்தாலும், மெட்ரோ ரயில் பணிகள் நடப்பதால், இங்கு சிக்னல்கள் தொடர்ந்து காட்சிப் பொருளாகவே உள்ளன. இதனால் வாகனங்கள் கட்டுப்பாடின்றி இச்சந்திப்பை கடந்து செல்கின்றன.

