/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மக்கள் பணத்தை கையாள வாரிய நிர்வாகிகளுக்கு பயிற்சி
/
மக்கள் பணத்தை கையாள வாரிய நிர்வாகிகளுக்கு பயிற்சி
ADDED : ஆக 26, 2024 02:04 AM

சென்னை:நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில், சென்னையில் 1.20 லட்சம் வீடுகள் உள்ளன. இந்த வீடுகளை பராமரிக்க தமிழக அரசு, கடந்த 2021ல், 'நம் குடியிருப்பு; நம் பொறுப்பு' என்ற திட்டத்தை துவங்கியது.
இதில், 'பிளாக்' வாரியாக நலச்சங்கங்கள் துவங்கி, மக்களே குடியிருப்பை பராமரிக்க வேண்டும். இதற்கு, வாரியத்திற்கு செலுத்த வேண்டிய பராமரிப்பு கட்டணத்தை, சங்கத்திடம் செலுத்த வேண்டும்.
பிளாக்கை சுற்றியுள்ள குடியிருப்பு வளாகம் பராமரிப்பு, சாலை, வடிகால், கழிவுநீர் குழாய் சீரமைப்பு, குடிநீர் வினியோகம் உள்ளிட்ட பணிகளை வாரியம் மேற்கொள்ளும்.
போதிய நிதி ஒதுக்காததால், வாரியம் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளவில்லை. இதனால், பராமரிப்பு கட்டணம் செலுத்தாத நபர்கள் மீது, சட்டப்படி நோட்டீஸ் வழங்கி, மேல் நடவடிக்கை எடுக்க, சங்கத்திற்கு வாரியம் அதிகாரம் வழங்கி உள்ளது.
அதேபோல், வாரிய எஸ்டேட் அதிகாரிகளும், நோட்டீஸ் வழங்கி கட்டணத்தை வசூலிக்க, வரி வசூலிப்பாளர்களை நியமித்துள்ளனர். ஒரு குடும்பத்திற்கு ஒரு வீடு என மத்திய, மாநில அரசுகள் விதிமுறைகள் வகுத்துள்ளன.
ஆனால், பல குடியிருப்புகளில் ஒருவருக்கு, 5 - 10 வீடுகள் என உள்ளன.
ஆதார் எண்ணை இணைக்க அரசு வலியுறுத்தி உள்ளதால், பல வீடுகள் வைத்துள்ளவர்கள், பராமரிப்பு கட்டணம் செலுத்தாமல்,'டிமிக்கி' கொடுத்து வருகின்றனர்.
இதனால், வாரியத்திற்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இது ஒருபுறமிருக்க, சில சங்கங்களை நிர்வகிப்பதில், பல்வேறு குளறுபடிகள் நடந்தன.
இதனால், வாரியம் நிர்வகிப்பது போல், சங்கத்தை நிர்வகிக்க, பயிற்சி வழங்க முடிவு செய்யப்பட்டது.
இதன்படி, வாரிய சட்டத்திற்கு உட்பட்டு ஒரு சங்கத்திற்கு ஒரு வங்கி கணக்கு துவங்குவது, பணத்தை முறையாக கையாளுவது, சங்க நிர்வாகிகளின் கடமை, அதிகாரிகளின் பொறுப்பு, ஆவணங்கள் பாரமரிப்பு, சங்க பதிவு புதுப்பிப்பு, குறைகள் குறித்து உயரதிகாரிகளிடம் முறையிடும் வழிமுறை குறித்து, பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.

