/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
திருவான்மியூரில் மழை காலத்திற்கு முன் வடிகால் பணியை முடிக்க தீர்ப்பாயம் உத்தரவு
/
திருவான்மியூரில் மழை காலத்திற்கு முன் வடிகால் பணியை முடிக்க தீர்ப்பாயம் உத்தரவு
திருவான்மியூரில் மழை காலத்திற்கு முன் வடிகால் பணியை முடிக்க தீர்ப்பாயம் உத்தரவு
திருவான்மியூரில் மழை காலத்திற்கு முன் வடிகால் பணியை முடிக்க தீர்ப்பாயம் உத்தரவு
ADDED : செப் 11, 2024 12:41 AM
சென்னை,
'திருவான்மியூர் கிழக்கு காமராஜ் நகரில், பருவமழை காலம் துவங்கும் முன்பே மழைநீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்' என, தென் மண்டல பசுமை தீர்ப்பாயம் சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிட்டுள்ளது.
சுகாதார சீர்கேடு
திருவான்மியூர், கிழக்கு காமராஜ் நகர் குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில், தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு:
சென்னை திருவான்மியூர் கிழக்கு காமராஜ் நகர் பகுதியில் அமைக்கப்பட்ட மழைநீர் வடிகால்வாய், பகிங்ஹாம் கால்வாயுடன் இணைக்கப்படவில்லை.
இதனால், மழைக்காலங்களில் தண்ணீர் வெளியேற வழியின்றி, கழிவுநீர் கால்வாய் வழியாக வீடுகளுக்குள் புகுந்தது. இதனால் துர்நாற்றத்துடன் சுகாதார சீர்கேடு ஏற்பட்டது.
எனவே, கிழக்கு காமராஜ்நகர் பகுதியில் உள்ள மழைநீர் வடிகாலை, பகிங்ஹாம் கால்வாயுடன் இணைக்க வேண்டும். மழைநீர் வடிகால்களில் துார் வாரி, மழைநீர் தங்கு தடையின்றி செல்ல வழி ஏற்படுத்த வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
விசாரணை
இதை விசாரித்த தென் மண்டல பசுமை தீர்ப்பாயம், இது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யுமாறு, சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிட்டது.
இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த தீர்ப்பாய நீதிபதி புஷ்பா சத்யநாராயணா, நிபுணர் குழு உறுப்பினர் சத்யகோபால் ஆகியோர் பிறப்பித்த உத்தரவு:
சென்னை மாநகராட்சி சார்பில் ஆஜரான வழக்கறிஞர், பெரும்பாலான பணிகள் முடிவடைந்து உள்ளதாகவும், மீதமுள்ள பணிகள் இரண்டு வாரங்களுக்குள் முடிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
அடுத்து வரும் பருவமழையின் போது, திருவான்மியூர் கிழக்கு காமராஜ் நகரில் தண்ணீர் தேங்காமல் இருப்பதை, சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்.
இது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து, சென்னை மாநகராட்சி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். வழக்கின் அடுத்த விசாரணை, வரும் 23ம் தேதி நடக்கும்.
இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.