/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வட்டப்பாறை அம்மன் உற்சவம் கோலாகல துவக்கம்
/
வட்டப்பாறை அம்மன் உற்சவம் கோலாகல துவக்கம்
ADDED : மே 02, 2024 12:41 AM

திருவொற்றியூர், திருவொற்றியூர், தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோவில், 2,000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. பிரசித்தி பெற்ற இக்கோவிலுக்கு, தினமும் நுாற்றுக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வர்.
விழாக்காலங்களில் கூட்டம் கட்டுக்கடங்காது. இங்கு தியாராஜ சுவாமி, வடிவுடையம்மன், வட்டப்பாறை அம்மனுக்கு என, மூன்று கொடிமரங்கள் உள்ள கோவில் என்ற சிறப்பு உண்டு.
இந்த நிலையில், ஆண்டுதோறும் சித்திரை மாதம், ஏழு நாள் வட்டப்பாறை அம்மன் உற்சவம் வெகு விமரிசையாக நடக்கும்.
அதன்படி, நடப்பாண்டு விழா நேற்றிரவு கொடியேற்றத்துடன் துவங்கியது. முன்னதாக, கோவில் வளாகத்தில், வடதிசை நோக்கி வீற்றிருக்கும் வட்டப்பாறை அம்மனுக்கு, சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு மஹா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
பின், மங்கல வாத்தியங்கள் முழங்க, உற்சவ தாயார், கொடி மரம் அருகே எழுந்தருளினார். தொடர்ந்து, வேத மந்திரங்கள் உச்சரிக்க, பால், தயிர், பன்னீர், மஞ்சள்நீர், இளநீர் உள்ளிட்ட பொருட்களால், கொடிமரத்திற்கு அபிஷேகம் செய்யப்பட்டது.
கூடியிருந்த ஏராளமான பக்தர்கள் பக்தி முழக்கமிட, கொடியேற்றம் நடந்தது. தொடர்ந்து, விழா நாட்களில், அபிஷேகம் மற்றும் உற்சவம் நடைபெறும். 7ம் தேதி கொடியிறக்கத்துடன் விழா நிறைவுறும்.
விழாவிற்கான ஏற்பாடுகளை, கோவில் உதவி கமிஷனர் சுப்பிரமணியம் தலைமையில், கோவில் ஊழியர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

