/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வழிபாடு செய்ய அனுமதி மறுக்கப்பட்டவர்களுடன் கோவிலுக்கு சென்று கலெக்டர், எஸ்.பி., தரிசனம்
/
வழிபாடு செய்ய அனுமதி மறுக்கப்பட்டவர்களுடன் கோவிலுக்கு சென்று கலெக்டர், எஸ்.பி., தரிசனம்
வழிபாடு செய்ய அனுமதி மறுக்கப்பட்டவர்களுடன் கோவிலுக்கு சென்று கலெக்டர், எஸ்.பி., தரிசனம்
வழிபாடு செய்ய அனுமதி மறுக்கப்பட்டவர்களுடன் கோவிலுக்கு சென்று கலெக்டர், எஸ்.பி., தரிசனம்
ADDED : செப் 17, 2024 12:30 AM

கும்மிடிப்பூண்டி, திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த வழுதலம்பேடு கிராமத்தில் எட்டியம்மன் கோவில் உள்ளது. கோவிலில் வழிபாடு செய்வதில் அந்த கிராமத்தை சேர்ந்த இரு பிரிவினர் இடையே நீண்ட காலமாக பிரச்னை இருந்து வருகிறது.
ஹிந்து சமய அறநிலைய துறை கட்டுப்பாட்டில் உள்ள அந்த கோவிலில், கும்பாபிஷேகம் நடத்த, கிராம மக்கள் சார்பில் அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து இரு பிரிவினரை அழைத்து அரசு தரப்பில் பேச்சு நடத்தப்பட்டது.
ஒரு பிரிவினர் காலையிலும், மறு பிரிவினர் பிற்பகலிலும் கும்பாபிஷேக நாளன்று வழிபாடு செய்வது என ஒப்புக்கொண்ட பின், கும்பாபிஷேகம் நடத்த அரசு அனுமதி வழங்கியது.
இதன்படி 22 ஆண்டுகளுக்கு பின், கடந்த ஆகஸ்ட் 9ல் கும்பாபிஷேகம் நடந்தது. கோவில் கும்பாபிஷேகம் முடிந்ததும், காலையில் வழிபாடு செய்த பிரிவினர், பிற்பகலில் வழிபாடு செய்ய வந்த மற்றொரு பிரிவினரை வழிபாடு செய்யவிடாமல், கோவிலுக்கான வழியை மறித்து தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர்.
இதனால் இரு பிரிவினருக்கு இடையே மோதல் வெடிக்கும் சூழல் ஏற்பட்டது. அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் இருக்க, வருவாய் துறையினர், கும்பாபிஷேகம் நடந்த அன்றே கோவிலுக்கு 'சீல்' வைத்தனர்.
வழிபாடு செய்ய மறுக்கப்பட்ட பிரிவினர், கோவிலில் வழிபாடு செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர். இரு பிரிவினரை அழைத்து மீண்டும் பேச்சு நடத்தப்பட்டது. அப்போது, 'கோவிலில் வழிபட எதிர்ப்பு தெரிவிக்கமாட்டோம்' என, மறு தரப்பினர் உறுதி அளித்தனர்.
அதன்படி நேற்று திருவள்ளூர் கலெக்டர் பிரபு சங்கர் தலைமையில், எஸ்.பி., சீனிவாச பெருமாள் முன்னிலையில், வழிபாடு மறுக்கப்பட்ட பிரிவினர் சுவாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்த நிகழ்வால், வழுதலம்பேடு கிராமத்தில் அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் இருக்க, 250க்கும் மேற்பட்ட போலீசார் வரவழைக்கப்பட்டனர்.
அனுமதி மறுக்கப்பட்ட பிரிவினர் பேரணியாக, கோவிலை நோக்கி சென்றனர். கலெக்டர், அவர்களை வரவேற்றார். தொடர்ந்து கோவிலுக்கு போடப்பட்டிருந்த சீல் உடைக்கப்பட்டு உள்ளே செல்ல அனுமதித்தார்.
பூ, பழம், தேங்காய், வெத்தலைப்பாக்கு தட்டுகளுடன் சன்னிதிக்குள் சென்று சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர்.
அப்போது அனுமதி மறுத்த பிரிவை சேர்ந்த முக்கிய நபர்களை கலெக்டர் அழைத்து ஒற்றுமையாக இருக்க வலிறுத்தினார். எட்டியம்மன் கோவிலுக்கான, 160 மீட்டர் பாதையை 8.86 லட்சம் ரூபாய் செலவில் கான்கிரீட் சாலையாக மாற்றப்படவுள்ளதாக கலெக்டர் தெரிவித்தார்.
இதனால் இரு தரப்பினரும் மகிழ்ச்சி அடைந்தனர்.

