வியாசர்பாடி ரயில்வே மேம்பால பணி: விரைந்து முடிக்க கோரிக்கை
வியாசர்பாடி ரயில்வே மேம்பால பணி: விரைந்து முடிக்க கோரிக்கை
ADDED : ஜூலை 17, 2026 08:12 PM

வியாசர்பாடி: வியாசர்பாடி, கணேசபுரம் ரயில்வே மேம்பால பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென, வடசென்னை கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
வடசென்னை குடியிருப்போர் நலச்சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் டி.கே.சண்முகம் சென்னை மாநகராட்சி, பாலங்கள் துறை கண்காணிப்பு பொறியாளரிடம் அளித்த மனு:
வியாசர்பாடி, கணேசபுரத்தில், 226.55 கோடி ரூபாய் செலவில், 678 மீ., நீளமும் 15.2 மீ., அகலமும் கொண்ட நான்கு வழி உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடக்கின்றன.
நில எடுப்பு மற்றும் தொழில்நுட்ப காரணங்களால் ஏற்பட்ட தாமதங்கள் முற்றிலும் சரிசெய்யப்பட்டு, தற்போது 60 சதவீதத்திற்கும் அதிகமான கட்டுமான பணிகள் நிறைவடைந்துள்ளன.
முழு பணிகளும் அக்., 2026க்குள் முடிக்கப்படுமென, சென்னை மாநகராட்சி தெரிவித்தது.
வடசென்னை மக்களின் நீண்ட கால கோரிக்கையான இத்திட்டத்தை எவ்வித தொய்வுமின்றி, தரக் கட்டுப்பாட்டுடன் விரைந்து முடிக்க, சென்னை மாநகராட்சி முழு வீச்சில் செயல்பட வேண்டும். மழை காலம் துவங்குவதற்கு முன், மாநகராட்சி விரைந்து பணிகளை முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
