/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
நீர்நிலை ஆக்கிரமிப்புகள் ஜூன் முதல் அகற்றம்
/
நீர்நிலை ஆக்கிரமிப்புகள் ஜூன் முதல் அகற்றம்
ADDED : மே 09, 2024 12:15 AM
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் அடையாறு, கூவம், பகிங்ஹாம் கால்வாய் உள்ளிட்ட நீர்நிலைகள் ஆக்கிரமிப்பில் சிக்கியுள்ளன. இவற்றில் குடிசைகள் மட்டுமின்றி பெரிய அளவிலான கட்டுமானங்களும் கட்டப்பட்டு உள்ளன. வீடுகள் மட்டுமின்றி சிறு தொழிற்சாலைகள், உணவு விடுதிகளும் ஆக்கிரமிப்பு கட்டடங்களில் இயங்கி வருகின்றன.
இதனால், மழைக்காலங்களில் வெள்ளநீர் வடிவதில் காலதாமதம் ஏற்படுகிறது. ஆக்கிரமிப்பாளர்களை மாற்று இடத்திற்கு அழைத்துச் சென்று, தங்க வைப்பதற்கும், அரசுக்கு செலவு மட்டுமின்றி பேரிடர் மீட்பு நடவடிக்கையால், நெருக்கடி ஏற்படுகிறது.
நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்பு களை முழுமையாக அகற்ற உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. இதையடுத்து, ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கான முன்னேற்பாடுகளில் நீர்வளம், வருவாய், தமிழக வாழ்விட மேம்பாட்டு வாரியம், சென்னை மாநகராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகள் இணைந்து கவனம் செலுத்தத் துவங்கியுள்ளனர்.
சென்னையில், பகிங்ஹாம் கால்வாய் ஆக்கிரமிப்பாளர்கள் கணக்கெடுக்கும் பணிகள் ஏற்கனவே முடிக்கப்பட்டு உள்ளன. மாற்று இடம் ஒதுக்கிய நிலையில், அங்கு செல்வதற்கு பலரும் தயக்கம் காட்டுகின்றனர். சென்னையில் உள்ள தமிழக வாழ்விட மேம்பாட்டு வாரிய வீடுகளை ஒதுக்கவேண்டும் என, வலியுறுத்தி வருகின்றனர்.
கூவம் ஆக்கிரமிப்பு கணக்கெடுப்பு நடந்து வரும் நிலையில், வீடுகளை ஒதுக்குவதற்கான ஏற்பாடுகள் விரைவில் துவங்கவுள்ளது. ஜூன் மாதம் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகளை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டு உள்ளது.
இதுகுறித்து நீர்வளத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
லோக்சபா தேர்தல் காரணமாக ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணிகள் துவங்கப்படாமல் உள்ளது. தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக, ஜூன் 4ம் தேதிக்கு பிறகு ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணிகள் துவங்கும். அதற்கு முன்பாக, ஆக்கிரமிப்பு பகுதிகளில் உள்ளவர்களுக்கு வீடுகள் வழங்கப்படும். வீடுகளுக்கு அருகில் பள்ளி, கல்லுாரிகளில் தங்கள் குழந்தைகளை சேர்ப்பதற்கும், வேலைவாய்ப்புகள் வழங்குவதற்கும் சில ஆலோசனைகளை அரசு கூறியுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்